சாட்டையடி

4 weeks ago 4

தமிழ்நாட்டை வளப்படுத்தும் முக்கிய ஆறுகளில் ஒன்றான பாலாறு, கழிவுகள் கலந்து முற்றிலும் காணாமல் போகும் அபாயத்தில் இருக்கிறது. கர்நாடக மாநிலம் நந்திதுர்கம் என்ற இடத்தில் தொடங்கும் பாலாறு, அந்த மாநிலத்தில் இருந்து 93 கிமீ பயணித்து, ஆந்திராவில் 33 கிமீ கடந்து தமிழகத்தை வந்தடைகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 222 கிமீ தூரம் ஓடும் பாலாற்றின் மொத்த நீளம் 348 கிமீ ஆகும். தமிழ்நாட்டில் பாலாறு, காஞ்சிபுரம் மாவட்டம் வயலூர் அருகே முகத்துவாரத்தை அடைந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. பாலாற்றினால் தமிழ்நாட்டில் 4.5 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பயனடைகின்றன.

இத்தகைய சிறப்பு வாய்ந்த பாலாற்றில், பல்வேறு கழிவுகள் கலப்பதால் மோசமான நிலையில் இருப்பதாக இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர். பாலாற்றில் கலக்கப்படும் கழிவுகளில் பெரும்பகுதி திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து வெளியேற்றப்படுகின்றன. இதனால் இந்த பகுதியின் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக விவசாயிகள், பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்த பகுதிகளில் உள்ள தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளும் பாலாற்றில் கலக்கின்றன. அதனால், அப்பகுதி மக்கள் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் அதிகமாக உள்ளது.

பாலாற்றில் எப்பொழுதுமே மணலுக்கு அடியில் ஊற்று வந்துகொண்டிருக்கும். ஆனால், இந்த பகுதியில் அதிக மணல் அள்ளப்படுவதால், இது நிலத்தடி நீரை மேலும் குறைக்கிறது. இதனால், நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆம்பூரில் வெற்றிலை விவசாயம் நடந்த நிலங்கள் அனைத்தும் தற்போது வளம் இழந்து பயன்பாடில்லாமல் இருக்கிறது. அண்டை மாநிலமான ஆந்திரா அரசும் பாலாற்றின் வளத்துக்கு வேட்டு வைத்து வருகிறது. தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் தமிழ்நாட்டு மக்கள் எதிர்ப்பை மீறி, 22 தடுப்பணைகளை ஆந்திரா அரசு கட்டியுள்ளது. அதையும் தாண்டி பாலாற்றில் தமிழ்நாடு விவசாயிகளுக்காக ஆர்ப்பரித்து வரக்கூடிய தண்ணீரில் இதுபோன்ற கழிவுகள் கலப்பதால், பாலாறு முற்றிலும் மாசடைந்துள்ளது.

பாலாற்றில் கழிவுகள் கலப்பதை தடுப்பது தொடர்பாக வேலூர் சுற்றுச்சூழல் கண்காணிப்பு குழு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த 2011ம் ஆண்டு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பரிதிவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. அதில், ‘‘பாலாற்றை மாசுபடுத்தும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு மற்றும் நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை மீறினால்கூட சம்பந்தப்பட்டவர்கள் திகார் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். தவறிழைக்கும் தோல் தொழிற்சாலைகள் இதை புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்’’ என கூறியுள்ளனர்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அதிக அக்கறை செலுத்தும் வகையில் உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பு வழங்கியுள்ளது. இது, தவறு செய்வோருக்கு சாட்டையடி கொடுப்பதுபோல் அமைந்துள்ளது. நமது சுற்றுச்சூழலை நாம் பாதுகாக்காவிட்டால், விலங்குகள், பயிர்கள் நாசமாகும். இறுதியில் நமக்கு நாமே பெரும் ஆபத்தில் முடியும். சுற்றுச்சூழல் பாதிப்பில், மனிதர்களால் ஏற்படும் சில பாதிப்புகளை சரிசெய்து, எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான, வளமான பூமியை விட்டுச்செல்ல வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அதைத்தான் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இதை பின்பற்றாவிடில், மனித இனம் பூமியில் வாழ முடியாது.

The post சாட்டையடி appeared first on Dinakaran.

Read Entire Article