சாட்சியை கலைத்தால் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரை கைது செய்யலாம்: ஐகோர்ட் உத்தரவு

2 weeks ago 3

சென்னை: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன். இவர் விதிகளை மீறி, அரசு அனுமதி பெறாமல், பல்கலைக்கழகத்தின் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக, பெரியார் பல்கலைக்கழக தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் ஆராய்ச்சி பவுண்டேசன் என்ற அமைப்பை தொடங்கினார். அரசு நிதியை பயன்படுத்தியதுடன், இதுசம்பந்தமாக புகார் அளித்தவர்களை ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக துணைவேந்தர் ஜெகநாதனுக்கு எதிராக தரப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட மறுத்த மாஜிஸ்திரேட் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இந்த ஜாமீனை ரத்து செய்யக் கோரி, சேலம் போலீஸ் கூடுதல் கமிஷனர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி பி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி, இந்த வழக்கின் புலன் விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உயர் நீதிமன்றம் நீக்கி உள்ளது.

வழக்கை ரத்து செய்யக்கோரி துணைவேந்தர் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதனால் புலன் விசாரணையை விரைந்து முடித்து ஏன் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யக்கூடாது என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் ராஜ் திலக், டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு ஆய்வு செய்ய வேண்டி உள்ளது என்று விளக்கம் அளித்தார். அப்போது, துணைவேந்தர் தரப்பில், ஏற்கனவே இதே பல்கலைக்கழகத்தில் இது போன்ற அமைப்பு துவங்கப்பட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி, ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பிக்க மாஜிஸ்திட்ரேட் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. கைதை நிராகரித்து பிறப்பித்த உத்தரவு சரிதான். அதே வேளையில் துணைவேந்தர் ஜெகநாதன், காவல்துறையின் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சாட்சிகளை கலைத்தால் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தலாம் என்று உத்தரவிட்டார்.

The post சாட்சியை கலைத்தால் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரை கைது செய்யலாம்: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article