சாக்கடை கால்வாய்களை முறையாக துர்வார வேண்டும்

2 weeks ago 1

திருப்பூர், ஜன. 23: திருப்பூர் மாநகராட்சி 50வது வார்டு பொதுமக்கள், மாநகராட்சி கமிஷனர் ராமமூர்த்தியிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- பெரியதோட்டம் பகுதியில் 9 வீதிகள் உள்ளன. இவற்றில் முறையாக சாக்கடைகள் தூர்வாரப்படுவது இல்லை. 2 வாரங்களுக்கு ஒருமுறை சாக்கடை தூர்வாரப்பட்டாலும், அரைகுறையாகவே தூர்வாரப்படுகிறது. இதனால் குடியிருப்பு வாசிகளுக்கு தொற்று பரவும் அபாயம் உள்ளது. சாலையின் 2 புறங்களிலும் சாக்கடை கழிவுகள், கான்கிரீட் சாலை கழிவுகள் தேங்கி கிடப்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. அதேபோல் குடிநீரும் 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. வாரம் ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். எங்கள் பகுதியில் உள்ள புஷ்பாநகர், அண்ணாநகர், காங்கயம்பாளையம்புதூர், குமாரசாமிகாலனி ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகள் 5 ஆண்டுக்கு மேலாக முழுவதுமாக சேதமடைந்து குண்டும், குழியுமாகவே உள்ளன. வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.

எங்கள் வார்டில் சேகரமாகும் குப்பை அண்ணாநகர் பொதுமக்கள் வசிப்பிடத்துக்கு அருகில் நொய்யல் ஆற்றுப்பாலத்தின் மீது கொட்டி துப்புரவுத் தொழிலாளர்கள் தீ வைத்து எரிக்கிறார்கள். இதனால் காற்றுமாசு ஏற்பட்டு குடியிருப்பு வாசிகள் அவதிப்படுகின்றனர். புதுக்காடு பிரதான வீதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையால் அங்கு தினமும் குடித்துவிட்டு சமூக விரோதிகள் செய்யும் தொந்தரவுகளால் பொதுமக்கள் ஆளாகிறார்கள். டாஸ்மாக் கடையை வேறிடத்துக்கு மாற்ற வேண்டும். வீதிதோறும் தெருநாய் தொந்தரவு இருப்பதால் உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மேலும் திருப்பூர் மாநகராட்சி சொத்துவரி உயர்வை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

The post சாக்கடை கால்வாய்களை முறையாக துர்வார வேண்டும் appeared first on Dinakaran.

Read Entire Article