ஆறுமுகநேரி, மே 6: சாகுபுரம் விலக்கு அருகே குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இதனை சரி செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆத்தூர் நீரேற்று நிலையத்தில் இருந்து திருச்செந்தூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த குழாய்கள் ஆத்தூரில் இருந்து ஆறுமுகநேரி முக்கிய சாலையின் ஓரமாக பதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஆறுமுகநேரி அடுத்த சாகுபுரம் விலக்கு அருகே தூத்துக்குடி -திருச்செந்தூர் மெயின் ரோட்டில் நேற்று முன்தினம் மாலையில் குழாய் உடைப்பு ஏற்பட்டு லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் சாலையில் ராட்சத பள்ளமும் ஏற்பட்டு உள்ளது. குழாய் உடைப்பால் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் வாகனங்கள் விபத்தில் சிக்காமல் இருப்பதற்காக பேரிகார்டு வைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் குடிநீர் குழாய் உடைப்பு காரணமாக திருச்செந்தூர் பகுதிக்கு குடிநீர் விநியோகமும் தடைபடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும். மேலும் குழாய் உடைப்பால் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை உடனடியாக சீரமைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். ஆறுமுகநேரி பகுதியில் அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகுவதை தடுக்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமும் அவ்வப்போது கண்காணிப்பில் ஈடுபட வேண்டுமென வலியுறுத்தப்பட்டு உள்ளது.
The post சாகுபுரம் விலக்கு அருகே குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் appeared first on Dinakaran.