சஷ்டி அப்த பூர்த்தி என்பது அறுபதாவது வயது முடிகின்ற நாளில் செய்ய வேண்டியது. கனகாபிஷேகம் என்பது ஆண் வாரிசு வழியில் கொள்ளுப்பேரன் பிறந்தவுடன் செய்வது. அதாவது மகன் வயிற்றுப் பேரனுக்கு மகன் பிறந்தால் செய்யப்படுகின்ற ‘ப்ரபௌத்ர சாந்தி’ அன்று கனகாபிஷேகம் செய்வது வழக்கம். கொள்ளுப்பேரன் பிறக்கின்ற வயதினைக் கணக்கிட்டுப் பார்த்தால், சஷ்டி அப்த பூர்த்தி ஆனவர்களுக்குத்தானே கனகாபிஷேகம் செய்ய இயலும். இதில் உங்களுக்கு என்ன சந்தேகம்.? சஷ்டி அப்த பூர்த்தி என்றழைக்கப்படும் அறுபது வயது நிரம்பியிருந்தால் மட்டும் போதாது, ஆண்வாரிசு வழியில் கொள்ளுப்பேரனைக் காண்பவர்களுக்குத்தான் கனகாபிஷேகம் என்பதைச் செய்ய
இயலும்.
?திருமணம் முதலான விசேஷங்களில் ஆரத்தி சுற்றுவது ஏன்? பின் அதை வாசலில் உள்ள கோலத்தில் கொட்டுவது ஏன்?
– தளவாய் நாராயணசாமி, பெங்களூரு.
ஆரத்தி சுற்றுவது என்பது திருஷ்டி சுற்றிப்போடும் விதமாக திருமணம் முதலான விசேஷங்களில் செய்யப்படுகிறது. மஞ்சளில் சுண்ணாம்பும் தண்ணீரும் கலந்து அதனைச் சுற்றிவிட்டு நெற்றியில் திலகமிட்டு பின்பு அதனை வாயிலில் உள்ள கோலத்தில் கொட்டுவார்கள். ஒரு சிலர் ஹாரத்தி சுற்றும்போது அதில் கற்பூரம் ஏற்றியும் சுற்றுவார்கள். கண் திருஷ்டிக்காக பூசணிக்காய் சுற்றும்போது அதன் மேல் கற்பூரம் ஏற்றி சுற்றுவார்கள் அல்லவா, அதுபோல திருஷ்டி கழிய வேண்டும் என்பதற்காக ஹாரத்தி சுற்றி வாசலில் கொட்டுகிறார்கள். பூசணிக்காயை சுற்றி முடித்த பின்னர் வாசலில்தானே போட்டு உடைப்பார்கள்? அதே போல, ஹாரத்தியையும் சுற்றி முடித்த பின்னர் வாசலில் சென்று
ஊற்றிவிடுகிறார்கள். பூசணிக்காய், தேங்காய், எலுமிச்சம் பழம் முதலானவற்றை திருஷ்டி சுற்றிப்போடுவது ஆண்களின் செயலாகவும், ஹாரத்தி சுற்றுவது என்பது பெண்களுக்கான கடமையாகவும் வைத்திருக்கிறார்கள். ஹாரத்தியை ஆண்களும், பூசணிக்காய் முதலானவற்றை பெண்களும் சுற்றக்கூடாது. மஞ்சளும், சுண்ணாம்பும் கலந்த அந்த ஹாரத்திக்கு நோய்தொற்றுக் கிருமிகளை விரட்டும் சக்தி உண்டு. எந்தவிதமான நோய்தொற்றுக் கிருமிகளும் வீட்டிற்குள் அண்டக் கூடாது என்பதற்காக நமது முன்னோர்கள் இந்த சம்பிரதாயத்தினை வைத்திருக்கிறார்கள்.
?பிரம்மஹத்தி தோஷம் சாபம் விளக்கவும். அதற்கு பரிகாரம் உண்டா?
– திருவேதம்பன், போரூர்.
ஒரு வேதம் அந்தணரை கொலை செய்வது அல்லது அவனது இறப்பிற்குக் காரணமாக இருப்பது அல்லது அவனது மனம் ஒடிந்துவிடும் அளவிற்கு துரோகம் செய்வது ஆகியவற்றால் பிரம்மஹத்தி தோஷம் உண்டாகும். இங்கே பிராமணன் என்பது பிறப்பின் அடிப்படையில் சொல்லப்படுவது அல்ல. நன்கு கற்றறிந்தவர்கள், கற்பிப்பவர்கள், ஆசிரியர்கள், ஒழுக்க நெறிதவறாது வாழ்பவர்கள், குரு மகான்கள், மடாதிபதிகள் ஆகியோரைக் குறிக்கும். மேற்சொன்னவர்களுக்கு துரோகம் இழைத்தாலும், அவர்களின் மனம் ஒடிந்துவிடுமாறு நடந்துகொண்டாலும் பிரம்மஹத்தி தோஷம் வந்து சேர்ந்துவிடும். மேற்சொன்னவர்களால் கிடைக்கின்ற சாபம் பிரம்ம சாபம் ஆகும். சாபத்திற்கு விமோசனம் உண்டு, பரிகாரம் செய்வதன் மூலமும், தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்பதன் மூலமும் சாபத்திலிருந்து விடுபட இயலும். ஆனால் பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து அத்தனை எளிதாக விடுபட இயலாது. அதனால் உண்டாகும் கஷ்டங்களை முழுமையாக அனுபவித்துத்தான் விடுதலை பெற இயலும்.
?பெண்கள் கழுத்தில் தாலி கட்டுகின்ற சம்பிரதாயம் எப்படி ஏற்பட்டது?
– எஸ்.எஸ்.வாசன், தென்எலப்பாக்கம்.
ஒவ்வொரு காலகட்டத்திலும், சம்பிரதாயங்கள் மாறியபடி உள்ளன. திருமணமேகூட வைதீகம், காந்தர்வம் என்று பல பெயர்களில் அழைக்கப்பட்டன. தாலி என்கின்ற பெயர் மட்டுமே வேறே தவிர, திருமணம் ஆகிவிட்டது என்பதற்கு அடையாளமாக, ஏதோ ஒரு அடையாளத்தை தரித்துக்கொண்டுதான் இருந்தார்கள். உதாரணமாக, பெண்கள் திருமாங்கல்யத்தை தவிர காலில் மெட்டி போடுவதையும், நெற்றி வகிடு மத்தியில் குங்குமம் வைத்துக்கொள்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். தாலி கட்டினால் மட்டும் அந்தத் திருமணம், இந்து திருமணச் சட்ட விதிகளின்படி செல்லுபடி ஆகாது. பாணிக்ரஹணம் (மணமகளின் கரம் பற்றி உறுதி கூறுதல்), ஸப்தபதி (மணமகளின் வலது கால் கட்டை விரலை பிடித்து ஏழு அடி எடுத்து வைத்தல்) ஆகிய நிகழ்வுகள் நடந்தால்தான் இந்துமத திருமண விதிகளின்படி திருமணம் நடந்ததாக ஏற்றுக் கொள்ளப்படும். புராணங்களில் தாலிகட்டுதல் என்கிற சம்பிரதாயத்திற்கான ஆதாரம் உண்டு. நம்மவர்கள் மீனாட்சி கல்யாணத்தை உதாரணமாகக் கொள்கிறார்கள். மீனாட்சி கல்யாணத்தின் போது சுந்தரேஸ்வரர், அன்னை மீனாட்சியின் கழுத்தில் மங்கலநாண் அணிவித்தார் என்று சொல்லப்பட்டுள்ளதை ஆதாரமாகக் கொண்டு, திருமணத்தின்போது தாலிகட்டுகின்ற சம்பிரதாயம் தோன்றியிருப்பதாக சாஸ்திரம் அறிந்த பெரியோர்கள் சொல்கிறார்கள்.
The post சஷ்டி அப்த பூர்த்தி ஆனவர்களுக்கு கனகாபிஷேகம் செய்யலாமா? appeared first on Dinakaran.