சண்டிகர்: நடிகர் சல்மான் கானுக்கு வந்த கொலை மிரட்டல் போன்று மற்றொரு நடிகர் அபினவ் சுக்லாவுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதால், அவர் பஞ்சாப் போலீசில் புகார் அளித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே பஞ்சாபை சேர்ந்த பிஷ்னோய் கும்பல், பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானை தொடர்ந்து மிரட்டி வருகிறது. பல்வேறு சூழல்களில் கொலை மிரட்டல் விடுத்து வருகிறது. தொடர் மிரட்டல்களால் சல்மான் கான் தனது பாதுகாப்பை மேலும் அதிகரித்துள்ளார்.
இந்நிலையில், பிஷ்னோய் கும்பலிடமிருந்து பாலிவுட் நடிகர் அபினவ் சுக்லாவுக்கு கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விஷயத்தை அபினவ் சுக்லா தனது சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்துள்ளார். மேலும், இந்த மிரட்டல்களுக்கு காரணமான சந்தேக நபரின் விவரங்களையும் அவர் தனது சமூக வலைதள கணக்கில் பகிர்ந்துள்ளார். மேலும் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என காவல்துறையினருக்கு வேண்டுகோள் விடுத்து, அந்த பதிவை பஞ்சாப் மற்றும் சண்டிகர் காவல்துறையினருக்கு டேக் செய்துள்ளார்.
அபினவ் சுக்லாவின் பதிவில், லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த ஒருவனிடம் இருந்து வந்துள்ள பதிவில், ‘நான் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவன்; உங்கள் வீட்டு முகவரி எனக்குத் தெரியும். சமீபத்தில் சல்மான் கானின் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தியது போலவே, உங்களது வீட்டிலும் தாக்குதல் நடத்துவோம். மரியாதையாக பேசு… இல்லையெனில், பிஷ்னோய் கும்பலின் பட்டியலில் உங்களது பெயரும் இடம்பெறும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனக்கு மட்டுமல்லாமல், தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பாதுகாப்பு பணியாளர்களுக்கும் இதேபோன்ற மிரட்டல்கள் வந்துள்ளது’ என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில், அபினவ் சுக்லாவின் மனைவி ரூபினா திலைக் மற்றும் டிவி நடிகர் அசிம் ரியாஸ் இடையே வாக்குவாதம் நடந்தது.
இந்த சர்ச்சை பெரிதாக பரவிய நிலையில், அபினவ் அசிமை கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்திருந்தார். இதன் பின்னணியில், அசிமின் ரசிகர்கள் கடந்த சில நாட்களாக அபினவை குறிவைத்து மிரட்டி வருகின்றனர். தற்போது வந்த மிரட்டல் செய்தியும் அசிமின் ரசிகர்களால் அனுப்பப்பட்டதாக அபினவ் குற்றம்சாட்டியுள்ளார். இருப்பினும், பிஷ்னோய் கும்பலின் பெயரில் மிரட்டல் செய்தி வந்திருப்பது அபினவை பதற்றத்தில் ஆழ்த்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
The post சல்மான் கானுக்கு வந்தது போன்று நடிகர் அபினவ் சுக்லாவுக்கு கொலை மிரட்டல்: பஞ்சாப் போலீசில் புகார் appeared first on Dinakaran.