சென்னை,
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுமண்டலமாக மாறியது. இதனால் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது.
நேற்று கனமழை பெய்யும் என்று ரெட்அலர்ட் விடுக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த மழை இல்லை. நேற்று மதியத்துக்கு பிறகு ஒரு துளி கூட மழை பெய்யவில்லை.
இன்றும் சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு பின்னர் நேற்று இரவு அது வாபஸ் பெறப்பட்டது.
இந்த நிலையில் இன்று அதிகாலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கடந்து சென்றது. காற்றழுத்த தாழ்வு பகுதி நெல்லூருக்கு அருகில் உள்ள நிலப்பகுதியை நோக்கி நகர்ந்து சென்றுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த போது சென்னை மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில் எந்த சலனமும் ஏற்படவில்லை.
இன்று மழை மேகங்கள் இல்லாமல் சூரியனை காணமுடிந்தது என்றாலும் வெப்ப சலனம் காரணமாக இன்று மாலை முதல் நாளை காலை வரை மழை பெய்யக்கூடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
சென்னை, புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், காரைக்கால், நாகையில் இன்று இரவு முதல் நாளை காலை வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் வட்டானம் என்ற இடத்தில் 6 செ.மீ. மழையும், தொண்டியில் 5 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.
ஆவுடையார் கோவில், திருவாடானை ஆகிய இடங்கில் 3 செ.மீ மழையும், ஊத்துக்கோட்டை, பள்ளிப்பட்டு, மணலி, தேவாலா, திருத்தனி, திருவொற்றியூர் ஆகிய இடங்களில் 3 செ.மீ மழை பதிவாகி இருக்கிறது.