நன்றி குங்குமம் தோழி
சர்வதேச விண்வெளி நிலையம் ஒரு கால்பந்து மைதானம் அளவிற்கு இருக்கும். இந்த மையத்தில் விண்வெளி ஆய்வுகள் நடத்துவதற்காக ரஷ்யாவும் அமெரிக்காவும் இறங்கியிருந்தன. இதில் ரஷ்யா முதன் முதலில் ‘ஸ்புட்னிக்’ என்ற பெயரில் உலகின் முதல் செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது. அதன் தொடர்ச்சியாக ‘ஸ்புட்னிக் 2’ என்ற பெயரில் அடுத்த செயற்கைக்கோள் கப்பலினை அனுப்பியது. இதில் ஆராய்ச்சிக்காக ‘லைகா’ என்ற நாய் செயற்கைக்கோளுடன் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. விண்வெளிக்கு சென்ற முதல் உயிரினம் என்ற பெயர் கொண்ட லைகா பயணத்தின் போதே இறந்து போனது.
அடுத்து ‘வேஸ்டாக்’ என்ற பெயரில் மற்றொரு ஆராய்ச்சி கப்பல் ஒன்றை தயார் செய்து, முதன் முதலாக மனிதனை அனுப்பியது. இந்த ஆராய்ச்சி கப்பல் பூமியின் மீது 1 மணி நேரம் 48 நிமிடங்கள் வரை இருந்தது. இது முக்கிய சாதனையாக அந்த நாட்களில் கருதப்பட்டது. அதனைத் தொடர்ந்து விண்வெளி நிலையம் ஒன்றை தொடங்கலாம் என்று நம்பிக்கை ஏற்பட்டது. 1971ல் ‘சல்யூட் 1’ என்ற முதல் விண்வெளி நிலையத்தை உருவாக்கி விண்ணில் செலுத்தியது ரஷ்யா. அதில் மூன்று விண்வெளி வீரர்கள் பயணம் செய்தனர். ஆறு நாட்கள் சுற்றுப் பாதையில் இருந்த போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டு அழிந்து போனது.
அதில் பயணித்த மூன்று விண்வெளி வீரர்களும் இறந்து போனார்கள். இதனை கவனித்த அமெரிக்கா ‘ஸ்கைலேப்’ (Skylab) என்ற விண்வெளி ஆய்வு நிலையத்தை தொடங்கியது. இது ஒரு பயணக் கப்பலாக இல்லாமல், பல முக்கியமான ஆய்வுகளுக்கும் பயன்பட்டது. இதைத் தொடர்ந்து ரஷ்யாவும் ‘மீர்’ என்ற விண்வெளி நிலையத்தை தொடங்கியது. 1998ல் சர்வதேச ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், கனடா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து ISS International Space Station என்ற பெயரில் சர்வதேச விண்வெளி நிலையத்தை தொடங்கியது. நாசா, ரோஸ்கோஸ்மஸ், ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், கனடா விண்வெளித் துறை, ஜப்பான் விண்வெளித் துறை ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த சர்வதேச விண்வெளி நிலையத்தை செயல்படுத்துகின்றன. சீனாவும் தன் பங்குக்கு 2022ம் ஆண்டு ‘தியாங்காங்’ என்ற பெயரில் விண்வெளி நிலையம் ஒன்றை அமைத்திருக்கிறது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் பூமியிலிருந்து பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு ஆராய்ச்சிகள் நடக்கும். சர்வதேச விண்வெளி நிலையம் மணிக்கு 17,500 மைல் வேகத்தில் பயணிக்கக்கூடியது. அதாவது, 90 நிமிடங்களுக்கு ஒருமுறை என்ற கணக்கில் ஒரு நாளைக்கு சராசரியாக 16 முறை பூமியைச் சுற்றி வரும். ஜீரோ புவியீர்ப்பு நிலையில் ஒவ்வொரு பொருளுக்கான சோதனைகள் நடத்தப்படுகிறது. இதில் வேலை செய்வதற்கும் ஆராய்ச்சிகள் நடத்துவதற்கும் விண்வெளி வீரர்கள் அங்கு தங்கி ஆய்வு செய்து வருகிறார்கள். ஆறு மாதம் தங்கி வேலை செய்து விட்டு பூமிக்கு திரும்பி விடுவார்கள். அதன் பிறகு வேறு ஒரு குழு சென்று அங்கு ஆராய்ச்சியினை தொடரும்.
சர்வதேச விண்வெளி நிலையம், 2031ம் ஆண்டுடன் தன் செயல்பாடுகளை நிறைவு செய்கிறது. இது குறித்து பஞ்சாப் மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர்
முனைவர் வெங்கடேஸ்வரன் நம்மிடம் பேசும் போது… ‘‘சர்வதேச விண்வெளி நிலையம் ஆராய்ச்சிகளுக்காக தொடங்கப்பட்டது. சுனிதா வில்லியம்ஸ், ‘விண்வெளியில் செடியை முளைக்க வைக்க முடியுமா? அது விதைத்தால் எப்படி எந்த திசையில் முளைக்கும்’ என்று ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.
நியூட்டனின் முதல் விதியில் ஒரு பொருள் நகர்ந்து கொண்டே இருந்தால் நகர்ந்து கொண்டே இருக்கும் ஏதாவது ஒரு விசை அதன் மீது மோதும் போதுதான் அதனுடைய திசை மாறும். அதை போலதான் பூமிக்கு மேலே 400 – 415 கிலோ மீட்டர் தூரத்தில் சர்வதேச விண்வெளி நிலையம் மிதந்து கொண்டு இருக்கிறது. இந்த விண்வெளி நிலையம் மிதந்து கொண்டே இருப்பதால் இதற்குள் இருப்பவர்களும் மிதந்து கொண்டுதான் இருப்பார்கள். அதனால்தான் தூங்கும் போது எங்காவது மிதந்து சென்று விடக்கூடாது என்பதால், பைக்குள் சென்று படுத்து தூங்குவார்கள்.
பூமியிலிருந்து கொடுக்கப்படும் கமாண்டிற்கு ஏற்ப இவர்கள் செயல்படுவார்கள். தங்கியிருப்பவர்களுக்கான உணவு, ஆக்சிஜன், நீர், துணி அனைத்தும் பூமியிலிருந்து மாதம் ஒரு முறை அனுப்பி வைக்கப்படும். உணவினை சமைத்து சாப்பிட முடியாது ஆனால் சூடாக்கி அல்லது உலர வைத்து தான் சாப்பிட முடியும். பச்சையாக சாப்பிடக்கூடிய காய்கறிகள், பழங்களை சாப்பிட முடியும். உதிர்ந்து போகக்கூடிய உணவுகளை எடுத்து செல்ல முடியாது. திரவ உணவுகள் மட்டுமே கொண்டு செல்வார்கள்.
ஆராய்ச்சிகள் நடப்பது மட்டுமில்லாமல் தேவைப்பட்டால் பூமியில் உள்ள பகுதிகளை புகைப்படமும் எடுப்பார்கள். உதராணமாக பூமியில் புயல் மற்றும் இயற்கை சீற்றங்கள் ஏற்படும் சமயங்
களில் விண்வெளி நிலையத்தின் மூலமாகவும் அதை கண்காணித்து புகைப்படம் எடுப்பார்கள். அந்தத் தருணத்தில் விண்வெளி கற்கள், பூமியின் மீது மோத வந்தால் அதனை தொழில்நுட்ப உதவியோடு மாற்றுப்பாதையில் செல்ல வைப்பதற்கான வேலைகளையும் செய்வார்கள். விண்வெளியிலிருந்து பூமிக்கு வரும் விண்கலங்கள் விபத்தாக காரணம் பிளாக் அண்ட் நேரம்.
விண்கலம் வளி மண்டலத்துக்குள் மீண்டும் நுழையும் போது ஏற்படும் அழுத்தம், புவியீர்ப்பு விசை காரணமாக சில நிமிடங்கள் தன் கட்டுப்பாடு அறையின் தொடர்பினை இழக்கும், அந்த சில நொடிகள்தான் ‘பிளாக் அவுட் டைம்’. அந்த நேரத்தில் கோளாறு ஏற்பட்டால், கட்டுப்பாட்டு மையத்தில் இருக்கும்நிபுணர்களால், விண்கலத்திற்கு வழிகாட்ட முடியாது. விண்வெளி வீரர்களாலும் பூமியில் இருக்கும் குழுவுக்கு அவசர தகவல்களை அனுப்ப முடியாது.
புவியீர்ப்பு விசை இல்லாததால், மனித உடலில் தசை மற்றும் எலும்பு பாதிக்கப்படாமல் இருக்க ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு மணி நேரம் உடற்பயிற்சியில் ஈடுபடுவார்கள். மேலும் புவியீர்ப்பு விசை இல்லாத காரணத்தால் ரத்த ஓட்டம் உடலின் அனைத்து பாகங்களுக்கும் இயல்புக்கு மாறாக பாயும். விளைவு தலைவலி, கண் வலி போன்றவை ஏற்படும். நாளாக நாளாக உடல் அதற்கேற்றவாறு தன் செயல்பாட்டினை மாற்றிக் கொள்ளும். விண்மீன் காஸ்மிக் கதிர்கள், ஆற்றல்மிக்க சூரிய துகள்களின் வெளிப்பாடுகளால் கண் சார்ந்த பிரச்னைகள், புற்று நோய் ஏற்படவும் சாத்திய கூறுகள் உள்ளன.
விண்வெளியில் புவியீர்ப்பு சக்தி இல்லாததால், தசைகள் மற்றும் எலும்புகளில் பாதிப்பு ஏற்படும். எலும்புகளின் அடர்த்தி குறைந்த தசைகள் மென்மையாகி பிறந்த குழந்தைகளின் கால்களை போல மாறியிருக்கும். அதனால் பூமிக்கு வந்த உடனே அவர்களால் நடக்க முடியாது. கண் பார்வை சார்ந்த பிரச்னைகளும் ஏற்படும். அவர்கள் தரை இறங்கியதும் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார்கள். பழைய நிலைக்கு திரும்ப குறைந்தபட்சம் ஆறு மாதங்களாகும்.
தொகுப்பு: மா.வினோத்குமார்
The post சர்வதேச விண்வெளி நிலையம்! appeared first on Dinakaran.