தாகா: 2023 ஆம் ஆண்டிலேயே தமிம் இக்பாலுக்கு வங்கதேச அணியில் இடம் மறுக்கப்பட்டது. அணியில் நிலவிய கருத்து வேறுபாட்டால் 2023 துவக்கத்தில் ஓய்வு அறிவித்திருந்தார். பின்னர் அப்போதைய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் வேண்டுகோளை ஏற்று தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்றார். ஆனால், அவருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பைக்கான வங்கதேச அணியில் அவருக்கு இடம் அளிக்கப்படவில்லை. அப்போது பல்வேறு சர்ச்சைகளும் எழுந்தன. மற்றொரு மூத்த வீரரான ஷகிப் அல் ஹசன், தமிம் இக்பால் அணியில் தேர்வு செய்யப்பட்டால், தான் விலகுவதாக அறிவித்தார்.
அதனால் தமிம் இக்பால் அணியில் தேர்வு செய்யப்படவில்லை. கடைசியாக அவர் செப்டம்பர் 2023ல் வங்கதேச அணிக்காக ஆடி இருந்தார். அதன் பின் அவர் உள்ளூர் டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்தார். தற்போது 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணித் தேர்வு நடைபெற்று வருகிறது. தமிம் இக்பால் வங்கதேச அணியில் இடம் பெறுவாரா? என்ற கேள்வி இருந்தது. இந்த நிலையில்தான் தமிம் இக்பால் ஓய்வு முடிவை அறிவித்து இருக்கிறார். “தன்னை குறித்து அணித் தேர்வின்போது விவாதிக்கப்பட வேண்டாம் என்பதாலேயே தான் தற்போது ஓய்வை அறிவித்து இருப்பதாகவும் அவர் விளக்கம் அளித்து இருக்கிறார்.
மேலும், தனது மகன் மற்றும் ரசிகர்கள் தான் வங்கதேச அணிக்காக ஆட வேண்டும் என விரும்புவதாகவும், ஆனால், தனக்கான நேரம் முடிந்துவிட்டது எனவும் கூறி இருக்கிறார். தமிம் இக்பால் வங்கதேச அணிக்காக 70 டெஸ்ட் போட்டிகளில் 5134 ரன்கள் எடுத்து இருக்கிறார். 243 ஒருநாள் போட்டிகளில் 8357 ரன்கள் எடுத்து இருக்கிறார். 78 சர்வதேச டி20 போட்டிகளில் 1758 ரன்கள் எடுத்து இருக்கிறார். அவர் வங்கதேச அணிக்காக ஒட்டுமொத்தமாக 25 சர்வதேச சதங்களை அடித்துள்ளார்.
The post சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு: எனக்கான நேரம் முடிந்துவிட்டது.! வங்கதேச வீரர் தமிம் இக்பால் உருக்கம் appeared first on Dinakaran.