
பெங்களூரு,
நீரஜ் சோப்ரா கிளாசிக் முதலாவது சர்வதேச ஈட்டி எறிதல் போட்டி பெங்களூருவில் உள்ள கண்டீரவா ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்தது. ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றவரும் (தங்கம், வெள்ளி), உலக சாம்பியனுமான இந்தியாவின் நீரஜ் சோப்ரா ஜெ.எஸ்.டபிள்யூ. ஸ்போர்ட்ஸ் மற்றும் இந்திய தடகள சம்மேளனம், உலக தடகள சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து இந்த போட்டியை நடத்தினார். இதில் நீரஜ் சோப்ரா உள்பட 12 வீரர்கள் பங்கேற்றனர்.
இதில் கலந்து கொண்டதன் மூலம் நீரஜ் சோப்ரா போட்டியை நடத்துபவராக இருந்து கொண்டு சர்வதேச போட்டியில் பங்கேற்ற முதல் இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்றார். விறுவிறுப்பான இந்த போட்டியில் உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் களம் கண்ட இந்திய நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா தனது 3-வது முயற்சியில் 86.18 மீட்டர் தூரம் எறிந்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். முதலாவது மற்றும் 4-வது வாய்ப்பில் பவுல் செய்த அவர் தனது 2-வது முயற்சியில் 82.99 மீட்டரும், 5-வது முயற்சியில் 84.07 மீட்டரும், 6-வது மற்றும் கடைசி வாய்ப்பில் 85.76 மீட்டர் தூரமும் எறிந்தார்.
அரியானாவை சேர்ந்த 27 வயதான நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தொடர்ச்சியாக வென்ற 3-வது பட்டம் இதுவாகும். கடந்த மாதம் 20-ந் தேதி நடந்த பாரீஸ் டைமண்ட் லீக் போட்டியிலும், 24-ந் தேதி போலந்தில் நடந்த கோல்டன் ஸ்பைக் சர்வதேச போட்டியிலும் முதலிடம் பிடித்து இருந்தார். முன்னாள் உலக சாம்பியனான கென்யாவின் ஜூலியஸ் யெகோ தனது 4-வது முயற்சியில் 84.51 மீட்டர் தூரம் எறிந்து 2-வது இடமும், இலங்கை வீரர் ருமேஷ் பதிராகே தனது 3-வது முயற்சியில் 84.34 மீட்டர் தூரமும் எறிந்து 3-வது இடம் பிடித்தனர்.