சென்னை: சர்ச்சைப் பேச்சுக்கு ‘மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்கிறேன் என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் திருவாரூர் கே.தங்கராசு நூற்றாண்டு விழா சென்னையில் கடந்த 6ம் தேதி நடந்தது. விழாவில் மிக கீழ்தரமான மொழியில் அமைச்சர் பொன்முடி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அமைச்சர் பொன்முடி பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. அமைச்சர் பொன்முடி பேச்சுக்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், பெண்கள் குறித்து ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடியின் கட்சி பதவி பறிக்கப்பட்டது. அதன்படி, திமுக துணை பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து பொன்முடி விடுவிக்கப்படுகிறார் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதனை தொடர்ந்து திமுக துணை பொதுச்செயலாளராக திருச்சி சிவா எம்.பி. நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில் சர்ச்சைப் பேச்சுக்கு ‘மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்கிறேன் என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
இது குறித்து திமுக முன்னாள் துணைப் பொதுச்செயலாளர் பொன்முடி நேற்று வெளியிட்ட அறிக்கை: தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஒரு உள் அரங்கக் கூட்டத்தில், தகாத பொருளில் தவறான சொற்களைப் பயன்படுத்தி நான் பேசிய பேச்சுக்கு மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இந்தத் தகாத கருத்தை நான் பேசியது குறித்து உடனடியாக மனப்பூர்வமாக வருந்தினேன். நீண்ட காலம் பொது வாழ்க்கையில் உள்ள எனக்கு இதுபோன்ற தடுமாற்றம் ஏற்பட்டது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். பலருடைய மனதைப் புண்படுத்தும் வகையில் இப்பேச்சு அமைந்து விட்டது குறித்தும், அவர்கள் தலைகுனியும் சூழல் ஏற்பட்டது குறித்தும் நான் மிகவும் மனம் வருந்துகிறேன். மனம் புண்பட்ட அனைவரிடமும் நான் பேசிய பேச்சுக்கு மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.
The post சர்ச்சை பேச்சு மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்கிறேன்: அமைச்சர் பொன்முடி அறிக்கை appeared first on Dinakaran.