சென்னை: சர்க்கரை நோயாளிகளுக்கான ‘பாதம் பாதுகாப்போம்’ திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படுவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் 10 கோடிக்கும் அதிகமானோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 25 சதவீதம் பேர் பாதம் தொடர்பான பாதிப்புகளால் அவதிப்படுவதும், அவர்களில் 85 சதவீதம் பேர் கால்களை இழக்க நேரிடுவதும் தேசிய பேரிடர் ஆகும். தமிழகத்தில் 80 லட்சம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்க்கரை நோயால் ஏற்படும் பாத பாதிப்புகளை ஆரம்ப நிலையில் கண்டறியாவிட்டால், ஆபத்தான பின்விளைவுகளும், கிருமி தொற்று மற்றும் கால்களை இழக்கும் அபாயமும் ஏற்படுகிறது. முன்கூட்டியே கண்டறிந்தால் 85 சதவீத கால் அகற்றத்தை தடுத்துவிட முடியும்.