
சென்னை,
இந்திய திரைத்துறை வரலாற்றில் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சரோஜா தேவி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். இவரது 14 -ம் வயதில் மகாதேவி காளிதாசா என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் 1955 -ல் திரைத்துறைக்கு அறிமுகமானார்.
இந்த நிலையில் நடிகை சரோஜா தேவி வயது முதிர்வு காரணமாக பெங்களூருவில் இன்று காலமானார். அவருக்கு வயது 87. சரோஜா தேவியின் மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, மூத்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் பலர், சரோஜாதேவியுடன் இணைந்து பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
அதன்படி, நடிகரும், ம.நீ.ம. கட்சித்தலைவருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்திருப்பதாவது:-
என்னைப் பார்க்கும் இடமெல்லாம் - என் எந்த வயதிலும் - கன்னம் கிள்ளும் விரலோடு, 'செல்ல மகனே' என்னும் குரலோடு இன்னொரு தாயாக இருந்தவர் சரோஜா தேவி அம்மா. மொழி, பிரதேச எல்லை இல்லாது வாழ்ந்த கலைஞர். மறைந்துவிட்டார். என் இரண்டாம் படமான 'பார்த்தால் பசி தீரும்' படப்பிடிப்புத் தருணங்கள் தொடங்கி எத்தனை எத்தனையோ அழியா நினைவுகள் நெஞ்சில் அலையடிக்கின்றன. கண்கள் ததும்புகின்றன. என்றைக்கும் என்னை முதன்மையானவனாகவே பார்க்க விரும்பிய தாயுள்ளம். வணங்கி வழியனுப்புகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.