சருமம், கூந்தல் கேருக்குக் கேரட் எண்ணெய்!

1 month ago 8

பல்வேறு அழகு பராமரிப்பு பொருட்களின் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் கேரட் எண்ணெய் சருமம் மற்றும் கூந்தலுக்கு ஏராளமான நன்மைகள் தரக்கூடியது. இந்த எண்ணெயை இயற்கையான முறையில் வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம். உங்கள் உபயோகத்துக்காக மட்டுமில்லாமல் சிறந்த முறையில் தயாரித்து சந்தைப்படுத்தவும் முடியும். இல்லத்தரசிகள் மற்றும் பணிபுரியும் பெண்கள், இதை பகுதி நேரத் தொழிலாக செய்து வருமானமும் ஈட்டமுடியும். கேரட் எண்ணெயின் செய்முறை, பயன்பாடு, நன்மைகள் மற்றும் சந்தைப்படுத்தும் முறைகள் பற்றி தெரிந்து கொள்வோம். ஒரு பொருளை வியாபார ரீதியில் தயாரிக்கப் போகிறீர்கள் என்றால், முதலில் அதனை சிறிய அளவில் தயாரித்து நீங்கள் உபயோகித்துப் பார்க்க வேண்டும். அதன் பலன்களை அனுபவித்து உணர்ந்தால்தான் மற்றவருக்கு அதைப் பற்றி உங்களால் தன்னம்பிக்கையுடன் எடுத்துக்கூறமுடியும்.

கேரட் எண்ணெய் தயாரிக்க

தேவையான பொருட்கள்: துருவிய கேரட் –
2 கிண்ணம், தேங்காய் எண்ணெய் –
2 கிண்ணம்.

செய்முறை: கேரட்டுகளின் இரண்டு முனைகளையும் நறுக்கி விட்டு நன்றாக சுத்தப்படுத்தவும். பின்னர் அவற்றை பருத்தித் துணியைக் கொண்டு ஈரமில்லாமல் துடைக்கவும். பின்பு எல்லா கேரட்டுகளையும் துருவிக் கொள்ளவும். ஒரு அகன்றவாணலியில் கேரட் துருவலைக் கொட்டி அத்துடன் சம அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து கலக்கவும். குறைவான தீயில் அவ்வப்போது இந்தக் கலவையை கிளறி விடவும். 15 நிமிடங்களில் கலவையில் இருந்து எண்ணெய் பிரிந்து மேலே வரும். அப்போது அடுப்பை அணைத்து விட்டு வாணலியை இறக்கி வைக்கவும். இந்தக் கலவை நன்றாக ஆறியபிறகு வடிகட்டவும். இப்போது பொன்னிறமான கேரட் எண்ணெய் தயார். இதனை சுத்தமான கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைக்கவும்.

குறிப்பு: கேரட் எண்ணெய் தயாரிக்க நீங்கள் பயன்படுத்தும் வாணலி, கரண்டி, வடிகட்டி, கண்ணாடி பாட்டில் என எல்லா உபகரணங்களும் ஈரப்பதம் இல்லாமல் உலர்வாக இருக்க வேண்டியது முக்கியம்.

எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?

♦ தலைக்கு குளிக்கும் முன்பு கேரட் எண்ணெயை தலைப்பகுதியிலும், கூந்தலிலும் தடவி நன்றாக மசாஜ் செய்யவும். ஒரு மணி நேரம் கழித்து தலைக்குக் குளிக்கவும்.
♦ இரண்டு துளி கேரட் எண்ணெயை முகம் முழுவதும் பூசி மென்மையாக மசாஜ் செய்யவும். பத்து நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தைக் கழுவவும். முகம் பொலிவுறும்.
♦ கழுத்து, அக்குள், தொடை, இடுக்கு போன்ற பகுதிகளில் சிலருக்கு நாள்பட்ட கருமை படர்ந்து இருக்கும். இவர்கள் அந்த இடத்தில் கேரட் எண்ணெய் கொண்டு நன்றாக மசாஜ் செய்து 30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவலாம்.
♦ கேரட் எண்ணெயை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பாதுகாக்க வேண்டிய அவசியமில்லை. 6 முதல் 8 மாதங்கள் வரை வெளியில் வைத்தே பயன்படுத்தலாம்.

நன்மைகள்: கேரட் எண்ணெய்யில் வைட்டமின் ஏ, சி மற்றும் பீட்டாகரோட்டின் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த எண்ணெயை தொடர்ந்து தலைக்கு பயன்படுத்தி வந்தால், வறட்சி நீங்கி கூந்தல் பளபளப்பாகும். வேர்க்கால்கள் வலுப்பெற்று முடி வளர்ச்சி அதிகரிக்கும். பொடுகு பிரச்னை நீங்கும் சருமப் பொலிவு அதிகரிக்கும்.

இப்படி சுலபமாக வீட்டிலேயே தயாரிக்கக் கூடிய கேரட் எண்ணெய் முறையே மார்க்கெட்டில் குறைந்தபட்சமாகவே ரு.300க்கு அதுவும் 100 மி.லி அளவிற்கு விற்கப்படுகிறது. இதனை நீங்கள் வீட்டிலேயே செய்து ஆன்லைனில் விற்பனை செய்யலாம். மேலும் அக்கம் , பக்கத்தார் தெரிந்தவர்களுக்கு குறைந்த விலையில் விற்றாலே கணிசமான வருவாய் ஈட்டலாம்.
– அ.ப.ஜெயபால்.

The post சருமம், கூந்தல் கேருக்குக் கேரட் எண்ணெய்! appeared first on Dinakaran.

Read Entire Article