சரிவில் முடிந்த இந்திய பங்குச்சந்தைகள்.. இன்றைய நிலவரம் என்ன?

2 hours ago 1

மும்பை:

அமெரிக்க ஜனாதிபதியின் வரிவிதிப்பு கொள்கைகளால் முதலீட்டாளர்களிடையே வர்த்தக போர் குறித்த கவலைகள் எழுந்துள்ளன. இதனால் உலகளாவிய சந்தைகளில் நிலையற்ற தன்மை நிலவுகிறது. இந்திய சந்தைகளிலும் இதன் தாக்கம் கடுமையாக இருந்தது. அதன்பின்னர் நேற்று சரிவிலிருந்து மீண்டு ஏற்றம் கண்டது.

இந்நிலையில், இந்தியாவில் ரிசர்வ் வங்கி நாளை மறுநாள் நிதிக்கொள்கை முடிவுகளை அறிவிக்க உள்ளது. இதனை கருத்தில் கொண்ட முதலீட்டாளர்கள் இன்று மிகுந்த எச்சரிக்கையுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டதால் நிலையற்ற தன்மை காணப்பட்டது. இதனால் பங்குச்சந்தைகளில் சரிவுடன் வர்த்தகம் முடிவடைந்தது.

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 312.53 புள்ளிகள் சரிந்து 78,271.28 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 367.56 புள்ளிகள் சரிந்து 78,216.25 என்ற அளவில் இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 42.95 புள்ளிகள் சரிந்து 23,696.30 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

சென்செக்ஸ் கணக்கிட உதவும் நிறுவனங்களில் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் கடும் சரிவை சந்தித்தது. அந்நிறுவன பங்கு மதிப்பு 3 சதவீதம் சரிந்தது. மூன்றாம் காலாண்டில் விற்பனை சரிந்து நிகர லாபம் 23.5 சதவீதம் குறைந்து ரூ.1,128.43 கோடியாக இருந்ததாக அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்ட நிலையில், பங்குகள் வீழ்ச்சி அடைந்துள்ளன.

டைட்டன், நெஸ்லே, ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, லார்சன் அண்ட் டூப்ரோ, ஐடிசி, சொமாட்டோ, பஜாஜ் பின்சர்வ் ஆகிய நிறுவனங்களும் நஷ்டத்தை எதிர்கொண்டன. அதானி போர்ட்ஸ், இண்டஸ்இண்ட் வங்கி, டாடா மோட்டார்ஸ், எச்டிஎப்சி வங்கி ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்தன.

ஆசிய சந்தைகளில் சியோல், டோக்கியோ ஏற்றத்துடனும், ஹாங்காங் சந்தை சரிவுடனும் முடிவடைந்தன. ஐரோப்பிய சந்தைகள் சரிவை சந்தித்தன. அமெரிக்க சந்தைகள் ஏற்றம் பெற்றன.

சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.84 சதவீதம் குறைந்து ஒரு பீப்பாய் 75.56 டாலராக உள்ளது.

Read Entire Article