மும்பை,
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சயிப் அலிகான். இவர் மும்பை பாந்திரா மேற்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 16-ந்தேதி இவரது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் சயிப் அலிகான் மீது சரமாரியாக கத்திக்குத்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடினார்.
இதனால் படுகாயம் அடைந்த சயிப் அலிகான் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவரது உடலில் 6 இடங்களில் கத்திக்குத்து விழுந்ததாகவும், முதுகு தண்டில் ஏற்பட்ட கத்திக்குத்து காயத்தால் முதுகெலும்பு திரவம் கசிந்ததாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து, 5 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு கடந்த 21ம் தேதி நடிகர் சயிப் அலிகான் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
நடிகர் சயிப் அலிகானை கத்தியால் குத்திய முகமது இஸ்லாம் என்ற நபரை போலீசார் கடந்த 18ம் தேதி கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அங்கு அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது. போலீஸ் காவலானது கடந்த 24ம் தேதி நிறைவடைந்ததையடுத்து கைதான முகமது இஸ்லாமின் காவல் இன்று வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கைதான முகமது இஸ்லாமின் காவல் இன்றுடன் நிறைவடைந்ததால் இன்று போலீசார் அவரை மும்பை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது, கைதான முகமதை போலீஸ் காவலை நீட்டிக்க புதிய காரணங்கள் எதுவும் இல்லாததால் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.