சம்பா, தாளடி நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்குக - விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

2 hours ago 2

சென்னை,

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

கடந்த சில நாட்களில் பொழிந்த தொடர் மழையினால் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி உள்ள நிலையில் விட்டு விட்டு  மீண்டும் தொடர்ந்த மழை மற்றும் காற்றால் சம்பா, தாளடி நெற்பயிர்கள் வெளிவந்த நிலையில் பல பகுதிகளில் சாய்ந்து விட்டது. டெல்டாவின் தென் பகுதியில் பெருமளவு இந்த பாதிப்பு உள்ளது. சில இடங்களில் நெல்கதிர் மணிகள் அழுகி வருகிறது. வெயில் எரிக்க துவங்கினால் இந்த நெல் மணிகள் முளைக்க துவங்கும். பெருமழை இல்லாவிட்டாலும் வீசிய காற்றால் நெற்பயிர்கள் எடை தாங்காமல் சாய்ந்துள்ளன.

காவிரி டெல்டாவில் சுமார் 40 சதவீதம் பயிர்கள் இப்படியான பாதிப்பில் உள்ளது. மழை வரும் என தெரிந்து பாதிப்பில் இருந்து தப்பிக்க முதிர் நிலையில் இருந்த பயிர்களை அறுவடை செய்யலாம் என்று விவசாயிகள் முடிவு செய்த நிலையில் தொழிலாளர்கள் பற்றாக்குறையில் அறுவடை இயந்திரங்களே சாத்தியம். அரசின் வேளாண் பொறியியல் துறையில் சில இயந்திரங்கள் மட்டுமே உள்ளதால்.. விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்யாது. மழை நீடிக்கும் நிலையில் கதிர் மணிகள் மேலும் அழுகி இழப்பு கூடுதலாகும் நிலை வரும்.

எனவே தமிழ்நாடு அரசு உடனடியாக கீழ்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். வட்டார அளவிலான குழுக்கள் அமைத்து இந்த பாதிப்புகளை உடனடியாக ஆய்வு செய்திட வேண்டும். பின் பாதிப்பிற்கு ஏற்ப தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும்.எஞ்சிய பகுதிகளில் வாய்ப்புள்ள கதிர்களை அறுவடை செய்திட பிற மாவட்டங்களில் உள்ள வேளாண் அறுவடை இயந்திரங்களை உடனடியாக டெல்டா மாவட்டங்களின் விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கிட வேண்டும்.

ஈரப்பதம் 17 சதவீதம் மட்டுமே அனுமதித்து கொள்முதல் செய்வது சாத்தியமில்லை. எனவே ஒன்றிய அரசின் இதற்கான அனுமதிக்கு காத்திராமல் 22 சதவீதம் ஈரப்பதம் நிர்ணயித்து கொள்முதல் செய்திடதமிழக அரசு அவசர நடவடிக்கை எடுத்திட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article