சமையல்காரர் முதல் வளர்ப்பு நாய் வரை அனைவருக்கும் சொத்தில் பங்கு... ரத்தன் டாடாவின் நெகிழ்ச்சி செயல்

2 months ago 14

மும்பை,

பழம்பெரும் இந்திய தொழில் அதிபர் மற்றும் டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடா (வயது 86), வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த 9-ம் தேதி காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர். இவரது மறைவை அடுத்து டாடா அறக்கட்டளையின் புதிய தலைவராக நோயல் டாடா நியமிக்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில் ரத்தன் டாடாவின் எழுதியுள்ள உயில் விவரங்கள் வெளியாகியுள்ளன. ரத்தன் டாடாவுக்கு தனிப்பட்ட சொத்தாக சுமார் ரூ. 10,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. ஜுகுதாரா சாலையில் இரண்டு மாடிகள் கொண்ட வீடு, கடற்கரை நகரமான அலிபாக்கில் 2000 சதுர அடி கொண்ட கடற்கரையோர பங்களா, 350 கோடி வங்கி டெபாசிட்கள் மற்றும் டாடா சன்சில் 0.83 சதவீத பங்குகள் என ரத்தன் டாடா பெயரில் சொத்துக்கள் இருக்கின்றன. ரத்தன் டாடா எழுதி வைத்துள்ள உயிலில் தன்னுடன் கடைசி வரை இருந்த அனைவருக்கும் சொத்து எழுதி இருக்கிறார்.

*உயிலில் தனது வளர்ப்பு நாய்க்கு ரத்தன் டாடா முக்கியத்துவம் கொடுத்துள்ளார். ஜெர்மன் ஷெப்பர்டு வகையை சேர்ந்த டிட்டோ என்ற ஒரு நாயை ரத்தன் டாடா ஆசையாக வளர்த்து வந்தார். இறப்பு வரைக்கும் தன்னுடன் இருந்த அந்த டிட்டோவுக்கும் தனது சொத்தில் ஒரு பங்கை எழுதி வைத்துள்ளார். மேலும் தனது டிட்டோ நாயை தனது சமையல்காரர் ராஜன் ஷா கவனித்துக் கொள்வார் என்றும் உயிலில் குறிப்பிட்டுள்ளார். அதற்கு ஆகும் செலவுகளை ஈடுகட்டும் வகையில் சொத்துக்களை ஒதுக்கியுள்ளார்.

*தவிர, சமையல்காரர் ராஜன் ஷா, வீட்டுப் பணியாளர் சுப்பையா ஆகியோருக்கும் சொத்தில் பங்கு என்று உயிலில் ரத்தன் டாடா கூறியுள்ளார்.

*அதேபோல் தன்னுடைய நண்பரான இளைஞர் சாந்தனு நாயுடுவுக்கு சொத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கை ரத்தன் டாடா எழுதி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சாந்தனு வெளிநாட்டில் சென்று படிக்க டாடா நிறுவனம் கடன் கொடுத்தது. அக்கடனையும் ரத்தன் டாடா தள்ளுபடி செய்தார்.

* மேலும் அவரது அறக்கட்டளை, சகோதரர், சகோதரிகள், வீட்டு பணியாளர்கள் மற்றும் பிறருக்கும் தனது சொத்தில் பங்களித்துள்ளார். டாடா சன்ஸ் நிறுவனத்தில் 0.83% பங்கையும் ரத்தன் டாடா அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளார்.

இவரது செயல் பலரது மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Read Entire Article