டெல்லி: ரத்தன் டாடாவின் ரூ.3,800 கோடி சொத்து யார் யாருக்கு? என்பது குறித்த அவரது உயிலில் எழுதி வைத்த விபரங்கள் தற்போது வெளியாகி உள்ள நிலையில், அதில் சமையல்காரருக்கு ரூ.1 கோடியும், வளர்ப்பு நாய்க்கு ரூ.12 லட்சமும் வழங்கியுள்ளார். பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா கடந்த ஆண்டு அக்டோபரில் காலமானார். அவர் மரணிக்கும் முன் அவரது சொத்துகளை பலருக்கும் பகிர்ந்து கொடுத்துள்ளார். அவர் எழுதி வைத்த உயிலின் விபரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வருகின்றன. கடந்த 2022 பிப்ரவரி 22ம் தேதி எழுதப்பட்ட ரத்தன் டாடாவின் உயிலில், அவர் தனது வீட்டு ஊழியர்கள், அலுவலக ஊழியர்கள், நண்பர்கள் மற்றும் தனது செல்லப்பிராணியான நாய்க்குக் கூட ஏதோ ஒன்றை கொடுத்து விட்டுச் சென்றுள்ளார். தன்னுடன் நெருக்கமானவர்களுக்கு மட்டுமின்றி, அவரிடம் கடன் பெற்றவர்களின் கடனையும் தள்ளுபடி செய்ய அறிவுறுத்தியுள்ளார்.
ரத்தன் டாடா எழுதி வைத்துள்ள உயிலின்படி, தனது வீடு மற்றும் அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்காக சுமார் ரூ.3.5 கோடியை ஒதுக்கி உள்ளார். அவரது நீண்டகால சமையல்காரர் ராஜன் ஷாவுக்கு ரூ.1 கோடி (ரூ.51 லட்சம் கடன் தள்ளுபடி உட்பட), சமையல்காரர் சுப்பையா கோனாருக்கு ரூ.66 லட்சம் (ரூ.36 லட்சம் கடன் தள்ளுபடி உட்பட), ஓட்டுநர் ராஜு லியோனுக்கு ரூ.19.5 லட்சம் (ரூ.18 லட்சம் கடன் தள்ளுபடி உட்பட) ஆகியவை அடங்கும். இது தவிர, அவரது செயலாளர் டெல்னாஸ் கில்டருக்கு ரூ.10 லட்சமும், டாடா டிரஸ்ட்ஸ் ஆலோசகர் ஹோஷி டி.மலேசாராவுக்கு ரூ.5 லட்சமும், அலிபாக் பங்களா பராமரிப்பாளர் தேவேந்திர காட்மொல்லுவுக்கு ரூ.2 லட்சமும், தனிப்பட்ட உதவியாளர் தீப்தி திவாகரனுக்கு ரூ.1.5 லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளன. அவர் செல்லமாக வளர்த்து வந்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாயான டிட்டோவின் பராமரிப்புக்காக ரூ.12 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகையிலிருந்து, ஒவ்வொரு காலாண்டிற்கும் ரூ. 30,000 எடுத்து அதனை நாயை பராமரிக்க பயன்படுத்த வேண்டும் என்று சமையல்காரர் ராஜன் ஷாவிடம் இவ்விசயம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது நிர்வாக உதவியாளர் சாந்தனு நாயுடு, கார்னெல் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிப்பிற்காக வாங்கிய ரூ.1 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. தவிர, தற்போது சுவிட்சர்லாந்தில் பிராட் அண்ட் விட்னியுடன் பணிபுரியும் அவரது பக்கத்து வீட்டுக்காரர் ஜேக் மல்லெட்டின், இங்கிலாந்தில் உள்ள வார்விக் வணிகப் பள்ளியில் சேருவதற்காக அவரிடம் பெற்ற ரூ.23.7 லட்சம் கடனும் தள்ளுபடி செய்யப்பட்டது. டாடாவின் பணத்தில் மூன்றில் ஒரு பங்கு (பங்குகள் மற்றும் ரியல் எஸ்டேட் தவிர்த்து) அவரது முன்னாள் தாஜ் ஊழியர் மோகினி தத்தாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் டாடாவின் உயிலில் அவரது இரண்டு ஒன்றுவிட்ட சகோதரிகளான ஷிரின் ஜெஹாங்கிர் ஜீஜீபாய் மற்றும் டயானா ஜீஜீபாய் (அவரது மீதமுள்ள சொத்தில் மூன்றில் ஒரு பங்கைப் பெறுவார்கள்), நண்பர் மெஹ்லி மிஸ்திரி (அலிபாக் பங்களா அவருக்கு வழங்கப்படும்), டாடா அறக்கட்டளைகளின் அறங்காவலரான டேரியஸ் கம்பட்டா ஆகியோர் அடங்குவர். இது தவிர, சீஷெல்ஸில் உள்ள அவரது ரூ.85 லட்சம் மதிப்புள்ள நிலம் சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட நிதியான ஆர்.என்.டி அசோசியேட்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் பங்குதாரர்களில் டாடா டிரஸ்ட்ஸின் முன்னாள் நிர்வாக அறங்காவலரான ஆர்.வெங்கடராமன் மற்றும் டாடா டெக்னாலஜிஸின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பேட்ரிக் மெக்கோல்ட்ரிக் ஆகியோர் அடங்குவர். ரத்தன் டாடாவின் ரூ.3,800 கோடியில் பெரும் பகுதியை ரத்தன் டாடா எண்டோவ்மென்ட் அறக்கட்டளைக்கும், ரத்தன் டாடா எண்டோவ்மென்ட் அறக்கட்டளைக்கும் ஒதுக்கினார். இவை இரண்டும் தொண்டு நிறுவனங்கள் என்று அந்த உயிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சமையல்காரருக்கு ரூ.1 கோடி, வளர்ப்பு நாய்க்கு ரூ.12 லட்சம்; மறைந்த ரத்தன் டாடாவின் ரூ.3,800 கோடி சொத்து யார் யாருக்கு?.. உயிலில் எழுதி வைத்த விபரங்கள் வெளியானது appeared first on Dinakaran.