சமையல் சிலிண்டர் விலை உயர்வு அமலுக்கு வந்தது

17 hours ago 2

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இதில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை மாதத்தின் முதல் தேதியில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்து வருகின்றன.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கடந்த ஆண்டு மார்ச் 8-ந் தேதியன்று வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்பட்டது. இதன்படி, ரூ.918.50-ல் இருந்து ரூ.818.50 ஆக குறைந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. 19.2 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர்களின் விலையில் கடந்த சில மாதங்களாகவே மாற்றம் இருந்து வந்தது.

கடந்த 1-ந் தேதி வணிக சிலிண்டரின் விலையில் ரூ.41 குறைக்கப்பட்டது. இதனால் சென்னையில் வணிக சிலிண்டர் ரூ.1,921.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே சமயம் கடந்த ஓராண்டாக வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்படவில்லை.

இந்த நிலையில், சமையல் கியாஸ் சிலிண்டரின் விலையை மத்திய அரசு நேற்று திடீரென ரூ.50 உயர்த்தியது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.868.50-க்கு விற்கப்படுகிறது. இது இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. மேலும் வருமானம் குறைவாக இருக்கும் சூழலில், சிலிண்டர் விலை உயர்வு மேலும் சுமையை அளிப்பதாக சாமானிய மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Read Entire Article