
தமிழ்நாடு சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்குமேல் உள்ள நிலையில் தமிழ்நாட்டில் தற்போதே அரசியல் களம் சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது.
திமுக, அதிமுக, தவெக, பாமக, பாஜக, நாம் தமிழர் உள்பட பல்வேறு கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள வியூக வகுக்கத்தொடங்கி விட்டன.
இதனிடையே, மத்திய அரசு புதிய கல்விக்கொள்கையை கொண்டு வந்துள்ளது. மும்மொழி கொள்கையை உள்ளடக்கியுள்ளதால் புதிய கல்விக்கொள்கையை ஏற்கமாட்டோம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதனால், ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய 2 ஆயிரத்து 152 கோடி ரூபாயை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை.

புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழ்நாட்டிற்கு கல்வி நிதியை வழங்குவோம் என்று மத்திய கல்வி மந்திரி தெரிவித்துள்ளார். இதனால், மத்திய பாஜக அரசுக்கும், மாநில திமுக அரசுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. இந்த விவகாரத்தில் திமுக, பாஜக இடையே சமூகவலைதளத்தில் கருத்து மோதல் நிலவி வருகிறது. 'கெட் அவுட் மோடி' (GetOutModi), 'கெட் அவுட் ஸ்டாலின்' (GetOutStalin) என்ற ஹேஸ்டேக்கள் தொடர்ந்து உலக அளவில் டிரெண்ட் ஆகி வருகின்றன. இந்த ஹேஸ்டேக்கள் 10 லட்சத்திற்கும் மேல் டுவிட் செய்யப்பட்டுள்ளன.
அதேவேளை, மக்கள் நலம் சார்ந்த பிரச்சினைகளை கையில் எடுத்துள்ள அதிமுக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. மேலும், அண்ணா மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் உள்பட பல்வேறு குற்ற சம்பவங்களை கண்டித்து அதிமுக போராட்டங்களை நடத்தியுள்ளது.

அதேபோல், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய் கள நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறார். கள்ளக்குறிச்சியில் விஷச்சாராய விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று விஜய் நலம் விசாரித்தார். பின்னர், விக்கிரவாண்டியில் தவெகவின் பிரமாண்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
மேலும், மாவட்ட செயலாளர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு கட்சி ரீதியிலான நடவடிக்கைகளை விஜய் தீவிரப்படுத்தி வருகிறார். 'கெட் அவுட் மோடி', 'கெட் அவுட் ஸ்டாலின்' ஹேஸ்டேக்கள் டிரெண்ட் ஆகி வரும் நிலையில் 'TVKForTN ' (டிவிகெபார்டிஎன்) ஹேஸ்டேகும் டிரெண்ட் ஆகி வருகிறது. தமிழக வெற்றிக்கழகம் கட்சியினர் இந்த ஹேஸ்டேகை டிரெண்ட் ஆக்கி வருகிறது.

அதேவேளை, நாம் தமிழர் கட்சியும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. அக்கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகி வரும் நிலையில் மக்கள் பிரச்சினைகளை கையில் எடுத்து தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன.

தேர்தலுக்கு ஓராண்டுக்கு மேல் கால அவகாசம் உள்ள நிலையில் கூட்டணி குறித்து தற்போதே அரசியல் கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை எடுக்கத்தொடங்கியுள்ளன.
அதேவேளை, ஏற்கனவே உள்ள கூட்டணியில் இருந்து மாற்று கூட்டணியில் சேரவும் சில அரசியல் கட்சிகள் முயற்சித்து வருகின்றன. அரசியல் கட்சிகளின் அடுக்கடுக்கான நடவடிக்கைகளாக தமிழ்நாட்டில் அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது.