நன்றி குங்குமம் தோழி
திருநங்கை சமூகத்தினருக்கிடையே மிஸ் தமிழ்நாடு திருநங்கை ராணி என்ற பெயரில் போட்டி ஒன்றை நடத்தி அதில் வெற்றி பெறும் மற்றும் கலந்து கொள்ளும் திருநங்கைகளை அவர்களுக்கு பிடித்தமான துறையில் கால் பதிக்க உதவி வருகிறது பார்ன் டூ வின் என்கிற அமைப்பு. ‘‘திருநங்கைகளிடையே இருக்கிற அழகுக் கலையை வெளிக்கொண்டு வரவும், தங்களுடைய சந்தோஷங்களை பகிர்ந்து கொள்ளவும்தான் இந்தப் போட்டியினை நடத்தினோம்’’ என்கிறார் அமைப்பை சேர்ந்த சுவேதா.
‘‘2013ல் சாதிக்கப் பிறந்தவர்களுக்காக சமூகம் சார்ந்த இந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தினை ஆரம்பித்தேன். இந்த அமைப்பின் நோக்கமே திருநங்கைகளுக்கான வேலை
வாய்ப்புகளை உருவாக்குவதும், படிக்க வைப்பதும், சொந்தமாக தொழில் தொடங்க உதவுவதும், அவர்களின் உரிமைகளுக்காக போராடுவது என பல வேலைகளை செய்யதான் இதனை துவங்கினேன். தங்களிடம் ஏற்படும் மாற்றத்தினை உணர்ந்து அவர்கள் வீட்டை விட்டு வெளியேறிவிடுகிறார்கள். அவ்வாறு வெளியேறும் திருநங்கைகளுக்கு தகந்த கல்வி கிடைத்தாலே அவர்களுக்கான தேவைகளை அவர்களே செய்து கொள்வார்கள். அதன் தொடர்பாக அமைப்பு மூலம் 100 பேரை படிக்க வைக்கிறோம்.
2009ம் ஆண்டு, ஏப்ரல் 15ம் தேதியை அரசாங்கம் தேசிய திருநங்கை தினமாக அறிவிச்சாங்க. இதே நாளில் 2013ல் இந்தியாவிலேயே முதல்முறையா துறைகளில் தங்களுடைய கனவுகளை நிறைவேற்ற துடிக்கும் திருநங்கைகளை அடையாளம் கண்டு சிகரம் தொட்ட திருநங்கைகள் என விருது வழங்கினேன். அதன் பிறகு கடந்த பத்து வருடமாக இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியினை நான் ஒருங்கிணைத்து செய்து வருகிறேன். எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள், தொழில் முனைவோர்கள், கல்வியாளர்கள் என பல துறைகளில் உள்ள திருநங்கைகளை அடையாளம் கண்டு அவர்களை இந்த நிகழ்ச்சியில் கவுரவித்திருக்கிறேன். இதன் தொடர்ச்சியாக ஆரம்பிக்கப்பட்டதுதான் ‘மிஸ் தமிழ்நாடு திருநங்கை ராணி’ என்றவர் அதனை துவங்கிய காரணம் குறித்து விவரித்தார்.
‘‘ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் முதல் வாரம் சந்தோஷத்தை பரிமாறிக் கொள்ளும் வாரமாக உலகளவில் கொண்டாடப்படுகிறது. அந்த வாரத்தில் திருநங்கைகளாகிய நாங்களும் எங்களின் சந்தோஷத்தை பரிமாறிக் கொள்ளும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடத்தலாம்னு எண்ணம் ஏற்பட்டது. அதுதான் இந்த ‘மிஸ் தமிழ்நாடு திருநங்கை ராணி’. ஆணாக பிறந்து பெண்ணாக தன்னை உணர்ந்து திருநங்கைகளாக இருப்பவர்கள் அதிகமாக தங்களை அழகுபடுத்திக் கொள்ள விரும்புவார்கள்.
அவர்களின் வெளித்தோற்ற அழகு மட்டுமில்லாமல், அவர்களின் திறமைக்கும் நல்ல எதிர்காலத்தை அந்த நிகழ்ச்சி மூலம் அமைத்து தர விரும்பினேன். இதில் கலந்து கொள்பவர்களுக்கு அழகோடு அறிவும் இருக்க வேண்டும். அழகு என்பது உடல் நிறத்தையும், உடல் அமைப்பினையும் குறிப்பதல்ல. சமூகம் சார்ந்து அவர்களுக்கான புரிதல் என்ன என்பதை தெரிந்து ெகாண்டு அதற்கு ஏற்பதான் தேர்வு செய்யப்படுவார்கள். அதில் 15 பேரை போட்டிக்காக தேர்வு செய்வோம்.
அவர்களுக்கு போட்டிக்கு தேவையான உடை, அலங்காரம் எல்லாம் நாங்களே ஸ்பான்சர் செய்திடுவோம். மேலும் மேடையில் எப்படி பேச வேண்டும். நடக்கும் முறை, தங்களின் திறமையை எவ்வாறு வெளிக்காட்டுவது என அனைத்து குறித்தும் அவர்களுக்கு பயிற்சி அளிப்போம். அதாவது, சர்வதேச அளவில் நடைபெறும் அழகிப் போட்டியில் உள்ள அனைத்து அம்சங்களான போட்டோ ஷூட், தங்களை அழகாக எடுத்துக்காட்டும் முறைகள் என அனைத்தும் இருக்கும். இது போன்ற அனைத்து பயிற்சியும் அளித்து தான் அவர்களை தயார்படுத்துவோம். இவர்களுக்கு தேவையான அனைத்தும் நாங்க செய்ய காரணம், இவர்களின் பொருளாதார நிலை. இதற்காக அவர்கள் செலவு செய்ய வேண்டும் என்று கூறினால், யாரும் போட்டியில் கலந்து கொள்ள முன் வரமாட்டார்கள்.
போட்டியில் வெற்றி பெறும் மூன்று நபர்களை ஃபேஷன் டிசைனிங் துறையில் சேர்த்து படிக்க வைக்கிறோம். மீதி 12 பேரை நடிப்பு, டெய்லரிங், மாடலிங், சுய தொழில், வண்டி ஓட்டுதல் என அவர்களுக்குப் பிடித்த துறையில் பயிற்சி அளிக்கிறோம். மேலும் அவர்களுடன் ஒரு வருடம் பயணித்து அவர்களை நல்ல நிலைமைக்கு கொண்டு வருவதுதான் எங்களின் முக்கிய நோக்கம். இந்த வருடம் தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர் முதல் வெல்டிங் வேலை செய்பவர்கள் என 24 பேர் விண்ணப்பித்திருந்தார்கள்.
அதில் இருந்து 15 பேரை தேர்ந்தெடுத்தோம். இதில் திருநெல்வேலியை சேர்ந்த ரேணுகா முதல் இடத்தையும், பெரம்பலூரை சேர்ந்த ஜீவிதா இரண்டாம் இடமும், சேலம் ரெஜினிகா மூன்றாமிடத்தையும் பெற்றனர். இதில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கும் மாடலிங் மற்றும் அவர்களுக்கு பிடித்தமான படிப்பில் எங்களின் செலவில் பயிற்சி அளிக்க இருக்கிறோம். இந்த சமுதாயம் எங்களை எவ்வளவு வெறுத்து ஒதுக்கினாலும் நாங்கள் சந்தோஷமாகத்தான் இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தவே இந்த நிகழ்ச்சி’’ என்கிறார் சுவேதா.
தொகுப்பு: மா.வினோத்குமார்
The post சமூகம் எங்களை ஒதுக்கினாலும் நாங்க சந்தோஷமாகத்தான் இருக்கிறோம்! appeared first on Dinakaran.