
சென்னை
நாமக்கல் மாவட்டம், முத்துகாளிப்பட்டியை சேர்ந்தவர் பிரவீன்ராஜ்; பா.ஜ.க - ஐ.டி., அணி தலைவர். இவர், தன் எக்ஸ் தள பக்கத்தில், தனியார் 'டிவி'யில் ஒளிபரப்பான செய்தியை டேக் செய்து, ஒரு தகவலை பதிவிட்டுள்ளார். இது குறித்து வந்த புகாரின் பேரில் பாஜக ஐ.டி. அணி தலைவர் பிரவீன்ராஜை போலீசார் கைது செய்தனர். பிரவீன் ராஜ் கைதுக்கு, பா.ஜ.க. வினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஐ.டி. அணி தலைவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
சமூக வலைத்தளப் பதிவுக்காக, தமிழக பாஜகவைச் சார்ந்த பிரவீன் ராஜ் கைது செய்யப்பட்டிருப்பது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் பெருகி வரும் போதைப் பொருள் புழக்கம், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், தனியாக வசிக்கும் முதியோர்கள் கொலை செய்யப்படுவது என, சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் ஆயிரம் இருக்க, திமுக அரசின் நிர்வாகத் தோல்விகள், சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி விடக்கூடாது என்பதற்காக, முழுநேரமாக தமிழகக் காவல்துறையை, சமூக வலைதளங்களைக் கண்காணிக்க மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வெட்கமாக இல்லையா?
பாரதப் பிரதமர், மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள், என அனைவரையும் தரக்குறைவாக விமர்சிக்கும் திமுகவினர் மீது புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு, சாதாரண சமூக வலைத்தளப் பதிவுகளுக்காக, பாஜகவினரைக் கைது செய்யும் சிறுபிள்ளைத்தனத்தைத் தொடர்வது சரியல்ல. ஆட்சி, அதிகாரம் நிரந்தரமல்ல.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.