ஆளுநர் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவுகளைப் போட்டு தமிழக மக்களையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரவை உறுப்பினர்களையும் அவமானப்படுத்தும் வகையில் நடந்து கொண்டதை பேரவை வன்மையாகக் கண்டிப்பதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று பேரவைத் தலைவர் மு.அப்பாவு வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது: கடந்த 6-ம் தேதி சட்டப்பேரவைக்கு உரை நிகழ்த்துவதற்காக ஆளுநர் வந்து அதை வாசிக்காமல் சென்றார். பின்னர் அதுதொடர்பாக தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் ஒரு கருத்தை வெளியிட்டார். சற்று நேரத்தில் அதை நீக்கிவிட்டு வேறொரு கருத்தை பதிவிட்டார். பிறகு அதையும் நீக்கிவிட்டு மற்றொரு கருத்தையும் வெளியிட்டார். இவ்வாறு கருத்து தெரிவிப்பதிலும் அவருக்கு தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது.