கைத்தறி புடவைகள் மட்டுமே என் டார்கெட்!

11 hours ago 2

நன்றி குங்குமம் தோழி

மாடர்ன் உடைகள் பல இருந்தாலும், புடவை அணியும் போது ஒரு பெண்ணிற்கு உரிய அழகு வர்ணிக்க வார்த்தைகள் போதாது. ஜீன்ஸ், குர்தா, லெக்கின்ஸ், கிராப் டாப், ஸ்லீவ்லெஸ் என மாடர்ன் உடைகளில் பல ரகம் இருப்பது ேபால் புடவையில் சில்க் காட்டன், பனாரஸ், போச்சம்பள்ளி, இக்கத், அஜ்ரக் என ஒவ்வொரு மாநிலங்களுக்கும் தனிப்பட்ட புடவை ரகங்கள் உள்ளன. அந்தந்த மாநில புடவைகளை அங்குள்ள நெசவாளர்களை கொண்டு கைத்தறி மூலம் நெய்து, புடவைகளை விற்பனை செய்து வருகிறார் சென்னையை சேர்ந்த பவித்ரா. இவர் தன் கணவரின் கொள்ளு தாத்தா நடத்தி வந்த புடவை கடையை மீண்டும் துவங்கி அதே பெயரில் நிர்வகித்து வருகிறார்.

‘‘நான் படிச்ச படிப்பிற்கும் இப்போது பார்க்கும் தொழிலுக்கும் சம்பந்தமே கிடையாது. கல்லூரியில் ஓட்டல் மேனேஜ்மென்ட் படிச்சேன். அதன் பிறகு விமானத்துறை நிறுவனத்தில் வேலை பார்த்தேன். எனக்கு ஆரம்பத்தில் இருந்தே உடைகள் மேல் விருப்பம் இருந்ததால் கல்லூரி படிப்பிற்கு பிறகு ஃபேஷன் டிசைனிங் படிச்சேன். அதற்கு காரணம் என் பாட்டி, பெரியம்மா மற்றும் அம்மா. இவங்க மூவருமே விதவிதமா புடவைகளை தேர்வு செய்து அணிவார்கள். அவர்களின் செலக்‌ஷன் ரொம்பவே நல்லா இருக்கும்.

அதைப் பார்த்து பார்த்து வளர்ந்த எனக்கும் புடவை மேல் தனிப்பட்ட ஆர்வம் ஏற்பட்டது. அவங்க பெரும்பாலும் காஞ்சிபுரத்தில்தான் புடவை வாங்குவாங்க, குறிப்பாக பட்டுப்புடவைகள். அவங்க ஷாப்பிங் போகும் போது நானும் உடன் செல்வேன். இப்படித்தான் எனக்குள் புடவை மேல் ஈர்ப்பு ஏற்பட்டதுன்னு சொல்லணும். அதனால்தான் கல்லூரி படிப்பு முடிச்சதும், ஃபேஷன் டிசைனிங் படிக்க காரணம். அதில் துணிகள் குறித்து நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்’’ என்றவர் திருமணத்திற்குப் பிறகுதான் புடவை கடையினை நிர்வகிக்க ஆரம்பித்துள்ளார்.

‘‘என்னுடைய அம்மா ப்ளே ஸ்கூல் ஒன்றை நடத்தி வந்தாங்க. திருமணத்திற்குப் பிறகு நான் கோடம்பாக்கத்தில் அதன் கிளை ஒன்றை துவங்கி நிர்வகித்து வந்தேன். இந்த சமயத்தில்தான் கோவிட் தாக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு என்னால் பள்ளியினை நிர்வகிக்க முடியாத காரணத்தால் மூடிவிட்டேன். காரணம், என்னால் குழந்தைகள், வீடு, வேலை என அனைத்தும் பார்த்துக் கொள்ள முடியவில்லை. என் கணவருக்கு கப்பலில் வேலை. ஆறு மாசம் அவர் கப்பலில் இருப்பார். குழந்தைகள் மற்றும் வீடு எல்லாம் என்னுடைய பொறுப்பு என்பதால் பள்ளியினை மேலும் எடுத்து நடத்த முடியவில்லை. அந்த சமயத்தில்தான் நான் இந்த ஆன்லைன் பிசினசை துவங்கினேன். அதற்கு காரணம் என் கணவரின் கொள்ளு தாத்தா.

அவர் புரோகிதர் என்பதால் பூஜைக்கு போகும் போது எல்லாம் அவருக்கு பட்டு வேஷ்டிகள் கிடைப்பது வழக்கம். நிறைய வேஷ்டிகளை வைத்து என்ன செய்வது. அப்படியே வைத்தால் கிழிந்திடும். அதனால் அதனை ஒரு விலைக்கு விற்றுவிடுவார். அந்தக் காசினைக் கொண்டு சம்பூர்ணா என்ற பெயரில் பட்டுப்புடவை கடை ஒன்றை 1970களில் துவங்கினார். அந்தக்காலத்தில் நல்லி, குமரன் போல் இவரின் பட்டுக் கடை மிகவும் பிரபலம்.

ஒன்பது கஜம், கல்யாணம், பூணூல் போன்ற விசேஷங்களுக்கு புடவை வாங்கவே இவரின் கடைக்கு வருவாங்க. சென்னை மட்டுமில்லாமல் கொல்கத்தாவிலும் ஒரு கிளை இருந்தது. அவரின் காலத்திற்குப் பிறகு இரண்டு கடைகளையும் நிர்வகிக்க முடியாததால் மூடிவிட்டனர். எனக்கு ஃபேஷன் மேல் ஆர்வம் இருப்பதால், என் கணவர் என்னிடம் தாத்தாவின் கடையை மீண்டும் எடுத்து நடத்த சொல்லிக் கொண்டே இருந்தார். நான் அப்போது பள்ளியை நிர்வகித்து வந்ததால் என்னால் இதில் கவனம் செலுத்த முடியவில்லை.

கோவிட்தான் என்னுடைய இந்த பிசினசிற்கு ஒரு வழியினை ஏற்படுத்திக் கொடுத்தது. அந்தக் காலக்கட்டத்தில் எல்லாமே ஆன்லைன் என்றானதால், நான் பட்டுப்புடவைகளை குறிப்பாக கைத்தறி புடவைகளை ஆன்லைனில் விற்பனை செய்ய துவங்கினேன்’’ என்றவர், மீண்டும் தாத்தாவின் கடையின் பெயரையே தன்னுடைய கடைக்கும் வைத்து ஆன்லைனில் பிசினசை துவங்கியுள்ளார்.

‘‘எனக்கு சின்ன வயசில் இருந்தே புடவை மேல் தனிப்பட்ட ஈர்ப்பு இருந்ததால் நான் கட்டும் ஒவ்வொரு புடவையும் குறிப்பாக அதன் கலர் காம்பினேஷன்களை வித்தியாசமாக தேர்வு செய்வேன். திருமணத்திற்குப் பிறகு என் மாமியாருக்கும் அதே போல் புடவைகளை தேர்வு செய்ய ஆரம்பித்தேன். நாங்க எந்த விசேஷத்திற்கு போனாலும் பலரும் எங்களின் புடவைகளைப் பார்த்து கேட்பார்கள். பிசினஸ் ஆரம்பித்த பிறகும், நான் ஒவ்வொரு புடவைகளையும் மிகவும் கவனத்துடன் தேர்வு செய்துதான் ஆன்லைனில் விற்பனை செய்ய துவங்கினேன்.

மேலும் என் கணவரின் தாத்தா காலத்தில் காஞ்சிபுரத்தில் இருந்த நெசவாளர்களை மீண்டும் தொடர்பு கொண்ேடன். அவர்களின் பரம்பரையில் உள்ளவர்கள் இப்போது எனக்காக டிசைன் செய்து தருகிறார்கள். என்னுடைய புடவைகள் அனைத்தும் கைத்தறி புடவைகள்தான். நான் பவர் லூம் புடவைகளை விற்பனை செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். முதல் இரண்டரை வருஷம் முழுக்க முழுக்க காஞ்சிபுரம் பட்டுப்புடவைகள் மட்டுமே நான் ஆன்லைன் முறையில் விற்பனை செய்தேன்.

அதன் பிறகு மற்ற மாநில புடவைகளையும் அறிமுகம் செய்ய விரும்பினேன். சந்தேரி, பட்டோலா, போச்சம்பள்ளி, அஜ்ரக், பனாரஸ் போன்ற புடவைகளையும் வாங்கி விற்பனை செய்ய துவங்கினேன். ஆன்லைன் என்பதால், அவர்களை எனக்கு சாம்பிள் அனுப்ப சொல்வேன். துணியின் தரம் பார்த்து ஆர்டர் கொடுப்பேன். அப்படித்தான் மற்ற மாநில புடவைகளையும் விற்பனை செய்ய ஆரம்பித்தேன். இதற்காக நான் விளம்பரம் எல்லாம் செய்யல. நண்பர்கள், உறவினர்கள், அவர்களின் நண்பர்கள், உறவினர்கள் என்று வாய் வார்த்தையாகத்தான் என் பிசினஸ் வளர்ச்சியடைய ஆரம்பித்தது. ேகாவிட் காலத்திற்குப் பிறகு பலர் புடவையினை நேரில் வந்து பார்த்து வாங்க விரும்பியதால், தாத்தாவின் கடைப் பெயரே என்னுடைய கடைக்கும் வைத்து கடந்த ஆறு மாதமாக கடையினை நடத்தி வருகிறேன்.

கடையை பொறுத்தவரை வாடிக்கையாளர்களின் நேரத்திற்கு ஏற்பதான் திறப்போம். எப்போதும் திறந்து வைப்பதில்லை. வாடிக்கையாளர்கள் எனக்கு ஃபோன் மூலம் சொல்லிடுவார்கள். அவர்கள் வரும் நேரத்தில் கடையினை திறப்போம். நான் இல்லாத நேரத்தில் என் மாமியாரும் வீட்டில் வேலைக்காக இருப்பவர்களும் பார்த்துக் கொள்வார்கள். மேலும் கடை முழுதும் ஒரு வாடிக்கையாளர் மட்டுமே ஷாப்பிங் செய்வதால், அவர்களுக்கு பர்சனலாக இருப்பதாக உணர்வார்கள். ஆனால் இந்தாண்டு தீபாவளியின் போது நாங்க புரோமோஷனுக்காக இன்ஸ்டாவில் பதிவு செய்திருந்தோம். அதைப் பார்த்து பலர் வர துவங்கினார்கள். அதனால் நாங்க கடையினை பண்டிகை நாள் வரை தினமும் திறந்து வைத்திருந்தோம். இனி பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் கடையினை திறந்து வைக்க திட்டமிட்டிருக்கிறோம்’’ என்றவர், தன்னிடம் உள்ள புடவை கலெக்‌ஷன்ஸ் குறித்து பகிர்ந்தார்.

‘‘எங்களிடம் மேற்குவங்காள டசர் புடவைகள், மத்திய பிரதேசத்தின் சந்தேரி, பெங்காலில் இருந்து காட்டன் மற்றும் பாந்தினி, ஆந்திராவில் போச்சம்பள்ளி, கேரளா புடவைகள், பனாரசில் இருந்து புரோகேட் மீனாகாரி மற்றும் தமிழ்நாட்டில் காஞ்சிப்பட்டு, சில்க் காட்டன் என பல ரக புடவைகளை வைத்திருக்கிறோம். சில புடவைகளுக்கு நானே டிசைன் செய்வதால், அதற்கான பட்டு நூலினை நான் வாங்கிக் ெகாடுத்திடுவேன். அதனால் என்னுடைய டிசைன்களை எனக்கு மட்டுமே அவர்கள் நெய்து தருவார்கள்.

காஞ்சிபுரம் மட்டுமில்லாமல் மற்ற மாநிலத்தில் உள்ள நெசவாளர்களையும் நேரடியாக சந்தித்து அவர்களிடம் இருந்து எனக்கு வேண்டிய புடவைகளை ஆர்டர் செய்திடுவேன். பட்டுப் புடவைகளை பொறுத்தவரை பெரும்பாலும் என் பாட்டி, மாமியார், அம்மா காலத்தில் இருந்து பாரம்பரிய டிசைன்களைதான் நான் மீண்டும் என் புடவைகளில் கொண்டு வருகிறேன். மேலும் புடவைகளில் ஹாண்ட் பிளாக், பிச்வாய், காந்தா தீம் மற்றும் கோலம் டிசைன்களை பிரின்ட் செய்து தருகிறேன். பட்டுப்புடவைகளில் எம்பிராய்டரியும் செய்து தருகிறேன். இதற்காக என்னிடம் தனிப்பட்ட கலைஞர்கள் உள்ளனர். அவ்வாறு வடிவமைக்கப்பட்ட புடவைகளை வாடிக்கையாளர்கள் ஆர்டர் கொடுத்து காத்திருந்து வாங்குகிறார்கள்.

புடவையினை தொடர்ந்து ரெடிமேட் கைத்தறி சல்வாரினை அறிமுகம் செய்ய இருக்கிறோம். மேலும் வட இந்தியாவின் அனைத்து மாநில புடவைகளையும் அறிமுகம் செய்யும் எண்ணம் உள்ளது. ஒரு பத்து புடவைகளை மட்டுமே வைத்து பிசினஸ் செய்ய முடியாது. குறைந்தபட்சம் 50 புடவைகளாவது வாடிக்கையாளர்களுக்கு சாய்ஸ் கொடுக்க வேண்டும். முதலீடு அதிகம் என்பதால், அதற்கேற்ப ஒவ்வொரு மாநில புடவைகளாக அறிமுகம் செய்ய இருக்கிறேன்’’ என்றார் பவித்ரா.

தொகுப்பு: ஷம்ரிதி

The post கைத்தறி புடவைகள் மட்டுமே என் டார்கெட்! appeared first on Dinakaran.

Read Entire Article