லுக் குட்! ஃபீல் குட்!

10 hours ago 2

நன்றி குங்குமம் தோழி

1997ல் மஞ்சுமல் குப்தா என்பவரால் தொடங்கப்பட்டதுதான் பாடிகிராஃப்ட் சலூன். இவரை தொடர்ந்து இவரது மகளும் மகனும் இணைந்து பாடிகிராஃப்ட் நிறுவனத்தை வழிநடத்தி வருகின்றனர். இந்தியா முழுவதிலும் மொத்தம் 25 கிளைகளை கொண்டுள்ள பாடிகிராஃப்ட் நிறுவனம் தற்போது சென்னையிலும் தங்களது புதிய கிளையினை திறந்துள்ளது. இதுகுறித்து விளக்குகிறார் பாடிகிராஃப்ட் சலூனின் இயக்குநர் மற்றும் க்ரியேட்டிவ் ஹெட் ஆன ஸ்வாதி குப்தா.

“என் அம்மா அவரின் இளமைப்பருவத்தில் சருமம் மற்றும் தலைமுடி சார்ந்த பிரச்னைகளை சந்தித்துள்ளார். அதெற்கெல்லாம் தீர்வினை கொண்டுவர தொடங்கிய தேடல்தான் இன்று நாங்கள் வாடிக்கையாளர்களுக்கும் சரியான தீர்வுகளை கொடுக்க காரணமாக அமைந்திருக்கிறது. அம்மா மஞ்சுமல் குப்தா சிறந்த அழகுக்கலை நிபுணர். குறிப்பாக சரும பராமரிப்பில் நிபுணத்துவம் பெற்றவர். அம்மா ஆரம்பத்தில் சிறிய சலூன் அமைப்பில்தான் இதனை துவங்கினார். ஆனால் வாடிக்கையாளர்கள் கொடுத்த வரவேற்பால், தொழில் வளர்ச்சிப் பாதையை நோக்கி சென்று கொண்டிருந்தது. அம்மாவைத் தொடர்ந்து நானும் என் சகோதரரும் அவருடன் இணைந்து இந்தத் தொழிலை எங்களின் குடும்பத் தொழிலாக மாற்றி அமைத்தோம்.

பெங்களூரில் அடுத்தடுத்த கிளைகளை நிறுவினோம். மக்களும் எங்களுக்கு தங்களின் முழு ஆதரவை கொடுத்தாங்க. இப்போது இந்தியா முழுதும் 25 கிளைகளை நிறுவியிருக்கிறோம் என்றால் அதற்கு எங்களது உழைப்பும் மக்கள் எங்கள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையும்தான் காரணம். இதனை நாங்க ஒரு தொழிலாக பார்க்கவில்லை. எங்களை நம்பி வரும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தீர்வுகள் மற்றும் உயர்தரமான சேவைகளை கொடுக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறோம்.

எங்களின் சலூன்களில் உள்ள அழகுக்கலை நிபுணர்களுக்கு நாங்களே பயிற்சி அளித்து வாடிக்கையாளர்களுக்கு எல்லா வகையான சேவைகளையும் வழங்கி வருகிறோம். நம்முடைய தலைமுடியில் பலவிதமான ஸ்டைலிங் செய்கிறோம். இதற்கு பலவிதமான ரசாயனப் பொருட்களை பயன்படுத்துவோம். அதனால் தலைமுடி பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. தலைமுடியில் உள்ள ரசாயனக் கழிவுகளை நீக்க அதனை டீடாக்ஸ் செய்ய வேண்டும். அதற்காக செலேட்டிங் ஓலப்ளெக்ஸ் என்ற சிகிச்சை முறையினை இங்கு வழங்குகிறோம். மேலும் பாடி காண்டடூரிங், உடல் எடை குறைத்து ஆரோக்கியத்தை மீட்டெடுக்க ஐவி டிரிப் தெரபி போன்ற உயர்ரக சிகிச்சையும் இங்கு வழங்கி வருகிறோம்.

பொதுவாக ஒரு சலூனில் ஃபேஷியல், மெனிக்யூர், பெடிக்யூர், சிகை அலங்காரம் போன்றவைதான் இருக்கும். ஆனால் இங்கு அதையும் தாண்டி பிரச்னைக்கான முழுமையான தீர்வினை அளிக்கிறோம். அதற்கு மருத்துவ ஆலோசனையுடன் மருத்துவ அழகு சிகிச்சை முறைகளும் இங்குள்ளது. அதற்கென தனிப்பட்ட பயிற்சி பெற்ற நிபுணர்கள் உள்ளனர். இவர்கள் வாடிக்கையாளர்
களின் தனிப்பட்ட பிரச்னைக்கு ஏற்ப சிகிச்சையினை வழங்குவார்கள். காரணம், எல்லோருக்கும் ஒரே விதமான சிகிச்சை அளிக்க முடியாது.

அவரவரின் உடல் நிலையைப் பொறுத்துதான் அழகு சார்ந்த சிகிச்சை அளிக்க முடியும். உதாரணமாக சருமத்தை டீடாக்ஸ் செய்ய டீ பாத் சிகிச்சை மேற்கொள்ளப்படும். இந்த சிகிச்சை முறை அவரவர் சருமத்திற்கு ஏற்ப மாறுபடும். மேலும் ஒருவருக்கு இந்த சிகிச்சை அளிக்கும் போது, அதே பலன் மற்றவருக்கும் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. அவரின் சருமத்திற்கு ஏற்ப இதன் சிகிச்சை முறையில் மாற்றம் செய்ய வேண்டும். எனவே தேவைகளுக்கு ஏற்ப தீர்வுகளை அளிப்பதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம்” என்றவர் அழகுக்கலை குறித்து சிலவற்றை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

“அழகுக்கலை எல்லோருக்குமானதுதான். ஒவ்வொருவரும் தங்களை அழகாக வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும் என நினைப்பது இயல்பானது. அதேபோல் நம்முடைய தோற்றம் அழகாக வெளிப்படும் போது மனதளவில் தன்னம்பிக்கை அளிக்கும். ஒவ்வொரு நாளும் தங்களுக்குப் பிடித்தமான ஆடைகளை அணிவது போலவே தங்களை மேலும் சிறப்பாக மெருகேற்றிக்கொள்ள எல்லோரும் விருப்பப்படத்தான் செய்வார்கள். ஆனால் சிலருக்கு அழகுக்கலை குறித்து சில தயக்கங்கள் இருக்கும். அது எல்லோருக்குமானது இல்லை என்று கருதுகிறார்கள். அழகு நிலையங்களுக்கு செல்வதெல்லாம் ஆடம்பரமானது என்று நினைக்கிறார்கள்.

மேலும் அந்தக் காலத்தில் யாருக்கும் இது போன்ற சிகிச்சைகள் அவசியமானதாக இல்லை. அதனால் நாம் ஏன் தேவையில்லாமல் செலவு செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். உண்மையில் நம் முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்தே அழகுக்கலை இருந்து வருகிறது. அவர்கள் ஆரோக்கியமான உணவினை உண்டார்கள். அதுவே அவர்களை மெருகேற்றியது. மேலும் பொருட்களையும் தரமான முறையில் விளைவித்தார்கள். எல்லாவற்றையும் விட குறைவில்லாமல் எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய வளங்களாகவும் அவை இருந்தன. சுற்றுப்புற மாசு இல்லாததால், சருமம் மற்றும் தலைமுடி சார்ந்த பிரச்னைகளும் அதிகமாக இருந்ததில்லை.

ஆரோக்கியமான வாழ்வியல் முறைகளை பின்பற்றியதால், அழகு சார்ந்த கடுமையான பிரச்னைகளை சந்திக்கும் வாய்ப்புகளும் குறைவாக இருந்தது. இன்று நாம் வாழும் சூழல் முற்றிலும் வேறு. சுற்றுச்சூழல் சீர்கேடு, அளவுக்கதிகமான வெயில், குளிர் போன்ற காலநிலை மாற்றங்களால் சருமம் மற்றும் கேசம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுகின்றன. அடுத்து உணவுப் பழக்கம் மற்றும் நாம் பயன்படுத்தும் தண்ணீர். சில நாடுகளில் தண்ணீரின் தன்மை கடினமாக இருக்கும்.

இவற்றையெல்லாம் எதிர்த்துப் போராட நம் உடலை அதற்கேற்றவாறு பராமரிப்பதும் அவசியம். வறண்ட சருமம் மற்றும் தலைமுடி, முகப்பருக்கள், முடி உதிர்தல் போன்ற பிரச்னைகளை தவிர்க்க சரும மற்றும் கேச பராமரிப்பு அவசியமாகிறது. இது உலகெங்கிலும் நிலவக்கூடிய ஒரு பொதுவான பிரச்னையாகவே மாறிவிட்டது. அதற்கான சிறந்த தீர்வினை முடிந்தவரை கொண்டுவருவதற்கான முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். அழகு நிலையம் என்றால் அதிக செலவு என்றுதான் நினைக்கிறார்கள். அப்படியில்லை, சிகிச்சைகளுக்கு ஏற்ப அதன் விலையும் மாறுபடும். மேலும் அனைவரும் சிகிச்சை மேற்கொள்ளும் வகையில்தான் இன்று அதற்கான கட்டணமும் இருக்கிறது. அதனால் மக்கள் அவர்கள் அழகினை மேம்படுத்த அவ்வப்போது இது போன்ற சலூன்களை நாடுவது நல்லது.

அழகுக்கலை சிகிச்சைகளும் தீர்வுகளும் உங்கள் அழகினை மேலும் மேம்படுத்துவதற்கே தவிர உங்களை முற்றிலுமாக மாற்றுவதற்கு இல்லை. மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் தனித்துவமான அழகினை பெற்றவர்கள். ஆனால் உங்களுக்குள் இருக்கும் சிறந்தவற்றை வெளிப்படுத்தும் போது அது உங்களின் அழகினை கூடுதலாக மெருகேற்றும். அதற்கு ஒவ்வொரு பெண்ணும் தன்னை நேசிக்க வேண்டும். அப்படி நேசிப்பவர்கள் தங்களை எப்போதும் புத்துணர்ச்சியாகவும், உற்சாகமாகவும் வைத்துக் கொள்ள விரும்புவார்கள்.

அதற்கு அவர்களை பராமரித்துக் கொள்வது அவசியம். மேலும் இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் வேலை குடும்பச் சூழல், சமூகம் சார்ந்த அனைத்துப் பிரச்னைகளையும் சந்திக்கிறார்கள். இதனால் ஏற்படும் மன அழுத்தம் சருமம் மற்றும் கேசத்தை பாதிக்கும். நம்மை பாசிட்டிவாக வைத்துக் கொண்டால் அதுவே நம் எண்ணங்களை புத்துணர்வாக வைத்திருக்க உதவும். ‘லுக் குட் ஃபீல் குட்’ ’’ என்று புன்னகைத்த ஸ்வாதி குப்தா, அழகு சிகிச்சைகள் மற்றும் அழகுக்கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கு அதற்கான சிறப்பு பயிற்சிகளை வழங்கி வருகிறார்.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்

The post லுக் குட்! ஃபீல் குட்! appeared first on Dinakaran.

Read Entire Article