
புதுடெல்லி,
சமூக வலைதளங்களில் மோசடி செய்பவர்களிடம் உஷாராக இருங்கள்' என ஐ.ஆர்.சி.டி.சி. எனப்படும் இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் சார்பில் அதன் உபயோகிப்பாளர்களுக்கு 'இ - மெயில்' அனுப்பப்பட்டு வருகிறது.
இது குறித்து ஐ.ஆர்.சி.டி.சி. அதிகாரிகள் கூறியதாவது:
ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் வாயிலாக டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட வசதிகளை பெற 9 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். தினமும் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. www.irctc.co.in என்ற இணையதளம் மற்றும் 'கூகுள் பிளே ஸ்டோரில் irctc rail connect app' என்ற செயலியை பதிவிறக்கம் செய்து சேவைகளை பெறலாம். இந்தச் செயலியை நிறுவுவதற்கு எஸ்.எம்.எஸ். அல்லது 'வாட்ஸாப்' தகவல்கள் கேட்கப்படாது.
ஆனால் ஐ.ஆர்.சி.டி.சி., பெயரில் ஓரிரு எழுத்துக்களை மாற்றிக்கொண்டு சிலர் வாட்ஸாப் டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வாயிலாக போலியாக எஸ்.எம்.எஸ்., 'லிங்க்' அனுப்பி வருகின்றனர். சிலர் 'வாய்ஸ் கால்' அழைப்பிலும் பேசுவதாக புகார்கள் வருகின்றன. எனவே ஐ.ஆர்.சி.டி.சி. உபயோகிப்பாளர்கள் இதுபோன்ற இணைப்புகளை 'க்ளிக்' செய்ய வேண்டாம். இந்த லிங்க் பயன்படுத்தினால் முறைகேடு நடக்க வாய்ப்புகள் உள்ளன. உங்களை தொடர்பு கொண்டு வங்கி அட்டை எண் பாஸ்வேர்டு உள்ளிட்டவை குறித்து விபரங்கள் கேட்டால் தெரிவிக்க வேண்டாம்.
இதுகுறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து, ஐ.ஆர்.சி.டி.சி. உபயோகிப்பாளர்களுக்கும் 'இ - மெயில்' வாயிலாக தகவல் அனுப்பி வருகிறோம். என கூறினார்.