நெல்லை, மார்ச் 1: அஞ்சல் துறையில் காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இக்காலக்கட்டத்தில் அபராத தொகையில் 25 சதவீதம் தள்ளுபடி செய்யப்படுகிறது.இந்திய அஞ்சல் துறையின் மூலம் பொதுமக்கள் குறைந்த பிரிமியத்தில் அதிக போனஸ் பெற்று பயன்பெறும் வகையில் அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு சூழல் காரணமாக இத்திட்டங்களில் காப்பீடு பெற்ற வாடிக்கையாளர்கள் தங்கள் தவணை தொகையை சரிவர செலுத்த தவறி விடுவதால் அந்த பாலிசிகள் காலாவதியாகி விடுகிறது.
இவ்வாறு காலாவதியான பாலிசிகளை குறைந்த அளவிலான அபராதத் தொகையுடன் புதுப்பிக்க இயலும். தற்போது அஞ்சல் ஆயுள் காப்பீட்டு இயக்குனரகமானது இன்று மார்ச் 1ம்தேதி முதல் வரும் மே 31ம்தேதி வரையிலான காலகட்டங்களில், தங்கள் காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு அபராத தொகையில் 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை தள்ளுபடி செய்து அறிவித்துள்ளது. அதிகபட்சமாக ரூ.2500 முதல் ரூ.3500 வரை விலக்கு அளிக்கும் சலுகையை அறிவித்துள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் காலாவதியான பாலிசிகளை புதுப்பித்து பயன்பெறுமாறு நெல்லை முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் முருகன் தெரிவித்துள்ளார்.
The post காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க 3 மாத கால அவகாசம் appeared first on Dinakaran.