புதுடெல்லி: தட்கல் டிக்கெட் முன்பதிவு நேரம் மாற்றப்பட்டிருப்பதாக பல்வேறு சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. இதன்படி, ஏசி வகுப்புகளுக்கான தட்கல் முன்பதிவு காலை 10 மணிக்கு பதிலாக 11 மணிக்கும், 2ம் வகுப்பு பெட்டிகளுக்கான தட்கல் முன்பதிவு காலை 11 மணிக்கு பதிலாக 12 மணிக்கும் மாற்றப்பட்டிருப்பதாகவும் இந்த நேர மாற்றம் வரும் 15ம் தேதி முதல் நடைமுறைக்கு வர இருப்பதாக கூறப்பட்டது. மேலும், டிக்கெட் முகவர்கள் காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை எந்த டிக்கெட்டையும் முன்பதிவு செய்ய முடியாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. இத்தகவல் வைரலான நிலையில் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (ஐஆர்சிடிசி) நேற்று வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘‘தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் டிக்கெட் முன்பதிவு நேரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதுதொடர்பாக வெளியான தகவலில் உண்மையில்லை. ரயில்வே முகவர்களுக்கான விதிமுறையிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை’’ என கூறப்பட்டுள்ளது.
The post சமூக ஊடகத்தில் வைரல் தகவல் தட்கல் டிக்கெட் முன்பதிவு நேரம் மாற்றப்படுகிறதா? ஐஆர்சிடிசி விளக்கம் appeared first on Dinakaran.