பிரபல தமிழ் நடிகை சமந்தாவும், நடிகர் நாகார்ஜூனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் விவாகரத்து செய்து கொண்டனர். பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான சோபிதா துலிபாலா என்பவரை நாகசைதன்யா திருமணம் செய்துகொள்ள போகிறார். இவர்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது.
இதற்கிடையே சமந்தா - நாகசைதன்யா விவாகரத்துக்கு பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்) கட்சியின் செயல் நிர்வாக தலைவரும், முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகரராவ்வின் மகனுமான கே.தாரக ராமாராவ்தான் காரணம் என்றும் அவர் செய்த விஷயங்களால் பல நடிகைகள் திருமணம் செய்துகொண்டு தெலுங்கு சினிமாவை விட்டே போய்விட்டார்கள்' என தெலுங்கானா மாநில பெண் மந்திரி கொண்டா சுரேகா கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
இந்த நிலையில், தெலுங்கானா மந்திரி சுரேகாவின் இந்த பேச்சுக்கு நடிகர் நானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், "எப்பேர்ப்பட்ட முட்டாள்தனத்தையும் பேசி தப்பித்து விடலாம் என்று நினைக்கும் அரசியல்வாதிகளைப் பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது. உங்கள் வார்த்தைகள் மிகவும் பொறுப்பற்றதாக இருக்கும்போது, உங்கள் மக்கள் மீது உங்களுக்கு ஏதேனும் பொறுப்பு இருக்கும் என்று எதிர்பார்ப்பது எங்கள் முட்டாள்தனம்.
இது நடிகர்கள், சினிமா சம்பந்தப்பட்டது மட்டுமல்ல; இது எந்த அரசியல் கட்சிக்கும் பொருந்தாது. இவ்வளவு மரியாதைக்குரிய பதவியில் இருப்பவர், ஊடகங்களுக்கு முன்னால் இப்படி அடிப்படை ஆதாரமற்ற குப்பைகளைப் பேசுவதும் சரி என்று நினைப்பதும் சரியல்ல. நமது சமூகத்தை மோசமாகப் பிரதிபலிக்கும் இத்தகைய செயலை நாம் அனைவரும் கண்டிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.