'சபாநாயகர் யாருடைய பக்கமும் சார்ந்து இருக்க கூடாது' - மல்லிகார்ஜுன கார்கே

6 months ago 21

புதுடெல்லி,

மாநிலங்களவை சபாநாயகர் கெஜதீப் தன்கர் பாரபட்சமாக நடந்து கொள்வதாக கூறி, அவர் மீது 'இந்தியா' கூட்டணியை சேர்ந்த 6 எம்.பி.க்கள் கடந்த 10-ந்தேதி நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்தனர். ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் காப்பதற்காக வேறு வழியின்றி இந்த முடிவை எடுத்ததாக 'இந்தியா' கூட்டணி எம்.பி.க்கள் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து இன்று மாநிலங்களவையில் ஜெகதீப் தன்கருக்கும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய ஜெகதீப் தன்கர், "எனது தந்தை ஒரு விவசாயி. நான் பலவீனமாக இருக்கமாட்டேன். இந்த நாட்டிற்காக எனது உயிரையும் தியாகம் செய்வேன். நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்ய உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் நீங்கள் அரசியலமைப்பை அவமதிக்கிறீர்கள்" என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த மல்லிகார்ஜுன கார்கே, "எனது தந்தையும் விவசாயிதான். உங்களை விட அதிக சவால்களை சந்தித்தவன் நான். எங்களுக்கு எதிரான பேச பா.ஜ.க. எம்.பி.க்களை நீங்கள் ஊக்குவித்துக் கொண்டிருக்கிறீர்கள். எங்கள் கூட்டணி கட்சிகளின் தலைவர்களை அவமதிக்கிறீர்கள். நீங்கள் கூறும் பெருமைகளை கேட்க நாங்கள் வரவில்லை, விவாதம் நடத்துவதற்கே நாங்கள் வந்திருக்கிறோம்" என்று பதிலளித்தார்.

இந்நிலையில், ஜெகதீப் தன்கர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, "சபாநாயகர் ஒரு நடுவராவார். அவர் யாருடைய பக்கமும் சார்ந்து இருக்க கூடாது. ஜே.பி.நட்டாவிற்கு பேசுவதற்கு 5 முதல் 10 நிமிடங்கள் வரை வழங்கப்படுகிறது. ஆனால் நாங்கள் பேச வேண்டும் என்று கையை உயர்த்தினால் எங்கள் மைக் ஆப் செய்யப்படுகிறது. அவையை ஒத்திவைக்க வேண்டும் என்ற முடிவுடனேயே ஆளுங்கட்சி எம்.பி.க்கள் வருகிறார்கள். எனது சுயமரியாதை மற்றும் அரசியலமைப்பு உரிமைக்காக நான் தொடர்ந்து போராடுவேன்" என்று தெரிவித்தார்.

Read Entire Article