மெல்போர்ன்: ஆஸ்திரேலியன் ஓபன் ஒற்றையர் டென்னிஸ் போட்டிகளில் நேற்று சபலென்கா, கோகோ காப், அல்காரஸ், ஜோகோவிச் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் அபார வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தனர். இந்தாண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டிகள் கடந்த 12ம் தேதி முதல் நடந்து வருகின்றன. 8ம் நாளான நேற்று நடந்த 4ம் சுற்று மகளிர் ஒற்றையர் போட்டி ஒன்றில் உலகின் முதல் நிலை வீராங்கனையான பெலாரசின் அரைனா சபலென்கா – 14ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் மிர்ரா ஆண்ட்ரீவா மோதினர்.
இந்த போட்டியின் துவக்கம் முதல் பேராதிக்கம் செலுத்திய சபலென்கா எந்தவித சிரமமுமின்றி ஆண்ட்ரீவாவை துவம்சம் செய்தார். 1 மணி நேரம், 2 நிமிடம் நடந்த இந்த போட்டியில் 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வென்ற சபலென்கா காலிறுதிக்குள் நுழைந்தார். மற்றொரு மகளிர் ஒற்றையர் 4ம் சுற்றுப் போட்டியில் உலகின் 3ம் நிலை வீராங்கனை, அமெரிக்காவின் கோகோ காப், சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக் மோதினர். முதல் செட்டை இழந்த காப், அடுத்த 2 செட்களையும் எளிதில் கைப்பற்றினார்.
இதனால், 5-7, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் வென்ற காப் காலிறுதிக்குள் இடம் பிடித்தார். ஆண்கள் பிரிவில் நடந்த ஒற்றையர் போட்டியில், ஸ்பெயினை சேர்ந்த உலகின் 3ம் நிலை வீரர் கார்லோஸ் அல்காரஸ், கிரேட் பிரிட்டன் வீரர் ஜேக் டிரேப்பர் மோதினர். முதல் இரு செட்களை, 7-5, 6-1 என்ற கணக்கில் இழந்த டிரேப்பர் காயமடைந்ததால் போட்டியிலிருந்து விலகினார். இதனால் வெற்றி பெற்ற அல்காரஸ் காலிறுதிக்குள் கால் பதித்தார்.
இன்னொரு போட்டியில் உலகின் 7ம் நிலை வீரரான, செர்பியாவை சேர்ந்த டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச், செக் வீரர் ஜிரி லெஹெக்கா மோதினர். முதல் இரு செட்களை எளிதில் வென்ற ஜோகோவிச்சிற்கு, 3வது செட் சவாலாக இருந்தது. இருப்பினும் தன் ஆழ்ந்த அனுபவத்தால் அதையும் ஜோகோவிச் கைப்பற்றினார். இதனால், 6-3, 6-4, 7-6 என்ற செட் கணக்கில் வென்ற ஜோகோவிச் காலிறுதிக்குள் நுழைந்தார். ஏற்கனவே 10 முறை ஆஸி ஓபன் சாம்பியன் பட்டம் வென்றுள்ள அவர் இம்முறையும் வெற்றி பெற்று புதிய வரலாறு படைப்பார் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
* டாம்மி பால் வெற்றி
ஆண்கள் பிரிவில் நடந்த மற்ற 4ம் சுற்று போட்டிகளில், அமெரிக்க வீரர் டாம்மி பால், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் வென்று காலிறுதிக்கு முன்னேறினர். மகளிர் பிரிவில் நடந்த போட்டிகளில் ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோஸா, ரஷ்யாவின் அனஸ்டாஸியா பாவ்லியுசென்கோவா வென்று காலிறுதிக்குள் அதிரடியாக நுழைந்தனர்.
* போபண்ணா இணை காலிறுதிக்கு தகுதி
கலப்பு இரட்டையர் டென்னிஸ் போட்டியில் நேற்று இந்திய வீரர் ரோகன் போபண்ணா (44), சீன வீராங்கனை ஸாங் சுவாய் (35) இணை, அமெரிக்க வீராங்கனை டெய்லர் டவ்ன்சென்ட், மொனாகோ வீரர் ஹியுகோ நைஸ் இணையுடன் 2வது சுற்றில் மோதுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அமெரிக்கா, மொனாகோ கலப்பு இரட்டையர் இணை போட்டி துவங்கும் முன்பே போட்டியிலிருந்து விலகிக் கொண்டனர். இதனால், இப்போட்டியில் வென்றதாக அறிவிக்கப்பட்ட போபண்ணா இணை காலிறுதிக்குள் நுழைந்தனர்.
The post சபலென்கா, காப், அல்காரஸ் வெற்றிகளால் களைகட்டும் காலிறுதி: வரலாறாய் உருவெடுக்கும் ஜோகோவிச் appeared first on Dinakaran.