சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்: 90 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம்

4 weeks ago 7

திருவனந்தபுரம்: சபரிமலையில் இவ்வருட மண்டல கால பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்ட கடந்த நவம்பர் 15ம் தேதி முதல் பக்தர்கள் கடந்த வருடத்தை விட அதிகமாக குவிந்து வருகின்றனர். தினசரி ஆன்லைனில் 70 ஆயிரம் பேருக்கும், உடனடி முன்பதிவில் 10 ஆயிரம் பேருக்கும் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டும், கேரள போலீசும் அறிவித்திருந்தது. ஆனால் பல நாட்களில் அதைவிட அதிகமாக பக்தர்கள் குவிந்தனர். ஆன்லைனில் இடம் கிடைக்காதவர்கள் சபரிமலைக்கு வந்து உடனடி முன்பதிவு மூலம் தரிசனம் செய்து வருகின்றனர்.

கடந்த மண்டல, மகரவிளக்கு காலத்தில் 70 ஆயிரம் பக்தர்கள் வந்தபோது கூட பக்தர்கள் 10 மணிநேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் இம்முறை கேரள போலீஸ் மற்றும் தேவசம் போர்டின் கட்டுக்கோப்பான நடவடிக்கைகளால் பல நாட்களில் 85 ஆயிரத்திற்கும் மேல் பக்தர்கள் வந்தபோதிலும் அதிகபட்சமாக 6 மணிநேரத்திற்கு மேல் பக்தர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படவில்லை.

இந்த வருட மண்டல காலத்தில் நேற்று வரை கடந்த 36 நாட்களில் 28 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். கடந்த 5 நாட்களில் மட்டும் 4.25 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர் என்று குறிப்பிடத்தக்கது. கடந்த 2 நாட்களில் மட்டும் 1.80 லட்சத்திற்கும் அதிகமானோர் தரிசனம் செய்தனர். இந்த மண்டல காலத்தில் கடந்த இரு தினங்களில் தான் மிக அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் சபரிமலை வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று அதிகாலை 3 மணிக்கு நடை திறந்த போது பக்தர்கள் வரிசை சரங்குத்தியையும் தாண்டி மரக்கூட்டம் பகுதி வரை காணப்பட்டது.

* 5 நாட்கள் முன்பதிவு எண்ணிக்கை குறைப்பு
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை வரும் 26ம் தேதி நடைபெறுகிறது. மகரஜோதி தரிசனமும், மகரவிளக்கு பூஜையும் ஜனவரி 14ம் தேதி ஆகும். இதை முன்னிட்டு பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என்பதால் நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வரும் 25ம் தேதி 54,444 பேருக்கும், 26ம் தேதி 60 ஆயிரம் பேருக்கும் மட்டுமே தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியும். இதேபோல ஜனவரி 12ம் தேதி 60 ஆயிரம் பேருக்கும் 13ம் தேதி 50 ஆயிரம் பேருக்கும், மகரவிளக்கு பூஜை தினமான 14ம் தேதி 40 ஆயிரம் பேருக்கும் மட்டுமே ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியும். இந்த 5 நாட்களுக்குமான முன்பதிவு நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கியது.

* தமிழக பக்தர் பலி
திருவள்ளூர் புன்னப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத் (25). சிலருடன் சபரிமலை தரிசனத்திற்காக வந்திருந்தார். தரிசனத்தை முடித்துவிட்டு நேற்று முன்தினம் இரவு சுமார் 9 மணியளவில் கோபிநாத் நிலக்கல்லில் வாகனம் நிறுத்தும் இடத்தில் தரையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் நிறுத்தியிருந்த ஒரு பஸ்சை அதன் டிரைவர் பின்புறமாக எடுத்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த பஸ் கோபிநாத்தின் தலை மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே கோபிநாத் பரிதாபமாக இறந்தார்.

The post சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்: 90 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Read Entire Article