சபரிமலையில் ஒரே நேரத்தில் 16 ஆயிரம் பக்தர்கள் ஓய்வு எடுக்க வசதி: திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஏற்பாடு

1 week ago 3

திருவனந்தபுரம்: சபரிமலையில் இவ்வருட மண்டல கால பூஜைகள் வரும் 16ம் தேதி முதல் தொடங்குகிறது. இதை முன்னிட்டு பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை, தங்குமிடம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நிலக்கல், பம்பை ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் 16 ஆயிரம் பக்தர்கள் ஓய்வு எடுக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நிலக்கல்லில் 5 ஆயிரம் பக்தர்கள் ஓய்வெடுக்கும் வகையில் 5 தற்காலிக ஷெட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. நிலக்கல் மகாதேவர் கோயில் வரிசை வளாகத்தில் 1000 பக்தர்கள் ஓய்வு எடுக்கலாம். நிலக்கல் பஸ் நிலையம் அருகே 3 ஆயிரம் பேர் ஓய்வெடுக்கும் வகையில் ஜெர்மன் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பம்பையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 4 வரிசை வளாகங்களில் 4 ஆயிரம் பக்தர்கள் ஓய்வெடுக்க வசதி உள்ளது.

பம்பையில் மேலும் 3 ஆயிரம் பேர் ஓய்வெடுக்கும் வகையில் தற்காலிக பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. தரிசனத்திற்கு வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு குழாய் மூலம் வெந்நீர் வழங்கப்படும். மேலும் பக்தர்களுக்கு பிஸ்கெட்டுகள், சுக்கு வெந்நீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பம்பையில் பெண்கள் ஓய்வெடுக்க ஓய்வறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

* பம்பையில் இருந்து பக்தர்களை ஏற்ற தமிழக பஸ்களுக்கு அனுமதி
கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை சபரிமலை செல்லும் பஸ்கள், வேன்கள் உள்பட அனைத்து வாகனங்களுக்கும் பம்பை வரை செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு சபரிமலையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து நிலக்கல் வரை மட்டுமே வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

பம்பையிலிருந்து பக்தர்களை ஏற்ற அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கேரள அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு தற்போது கேரள அரசு அனுமதி அளித்துள்ளது. பம்பையிலுள்ள கேரள அரசு பஸ் நிலையத்தில் தமிழக பஸ்களை நிறுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மண்டல காலம் முதல் தரிசனம் முடிந்து திரும்பும் பக்தர்கள் பம்பையிலிருந்து தமிழக அரசு பஸ்களில் ஏற வசதி ஏற்பட்டுள்ளது.

The post சபரிமலையில் ஒரே நேரத்தில் 16 ஆயிரம் பக்தர்கள் ஓய்வு எடுக்க வசதி: திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஏற்பாடு appeared first on Dinakaran.

Read Entire Article