சபரிமலையில் 10 மணி நேரத்திற்கு மேல் காத்திருக்கும் பக்தர்கள்

3 weeks ago 5


திருவனந்தபுரம்: சபரிமலையில் 18ம் படியில் ஏறும் வேகம் குறைந்ததால் கடந்த சில தினங்களாக தரிசனத்திற்கு பக்தர்கள் 10 மணிநேரத்திற்கும் மேல் வரிசையில் காத்திருக்கின்றனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது மகரவிளக்கு கால பூஜைகள் நடந்து வருகின்றன. புத்தாண்டு என்பதால் கடந்த 31ம் தேதி முதல் தொடர்ந்து பக்தர்கள் குவிந்து வருகின்றனர். கடந்த மண்டல காலத்தில் பக்தர்கள் கட்டுக்கடங்காமல் குவிந்த போதிலும் 18ம் படியில் ஏறும் வேகம் அதிகமாக இருந்ததால் நீண்ட நேரம் பக்தர்களுக்கு வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படவில்லை.

பல நாட்களில் தினமும் 85 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தரிசனத்திற்கு வந்தனர். ஒரு சில நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தையும் தாண்டியது. ஆனாலும் பக்தர்கள் அதிக சிரமம் இல்லாமல் தரிசனம் செய்தனர். அப்போது 1 நிமிடத்திற்கு 75 முதல் 85 பக்தர்கள் வரை 18ம் படி ஏறினர். ஆனால் தற்போது நிமிடத்திற்கு 65 பக்தர்கள் மட்டுமே ஏறுகின்றனர். சில சமயங்களில் வயதானவர்கள், குழந்தைகள் வரும்போது இந்த எண்ணிக்கை 50க்கும் குறைகிறது. இதனால் கடந்த சில தினங்களாக பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு 10 மணி நேரத்திற்கும் மேல் ஆகிறது.

தற்போது புதிதாக 18ம் படியில் பக்தர்களை ஏற்றுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள போலீசாருக்கு அனுபவம் குறைவு என்பது தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. எனவே 18ம் படியில் அனுபவம் உள்ள போலீசாரை நியமிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே இன்றும் சபரிமலையில் பக்தர்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர்.

The post சபரிமலையில் 10 மணி நேரத்திற்கு மேல் காத்திருக்கும் பக்தர்கள் appeared first on Dinakaran.

Read Entire Article