சபரிமலைக்கு சென்று திரும்பியபோது சோகம் கார் மரத்தில் மோதி ஐயப்ப பக்தர்கள் 2 பேர் பரிதாப பலி

2 hours ago 3

*கோவை அருகே சோகம்

மேட்டுப்பாளையம் : கோவை அருகே நேற்று காலை கார் மரத்தின் மீது மோதிய விபத்தில் 2 ஐயப்ப பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர். சபரிமலைக்கு சென்று திரும்பியபோது இந்த சோக சம்பவம் நடந்தது.

கர்நாடக மாநிலம் கொள்ளேகால் சாம்ராஜ்நகரை சேர்ந்த நாகராஜ் (58), வெங்கடாத்திரி (62), மகேஷ்குமார் (44), துரைசாமி (61), சுவாமி(40) உள்ளிட்ட 5 பேரும் ஐயப்பனுக்கு மாலை போட்டு சில தினங்களுக்கு முன் சபரிமலைக்கு காரில் சென்றனர். அங்கு சாமி தரிசனம் முடித்து விட்டு ஊர் திரும்பினர். கோவை அடுத்த சிறுமுகை- சத்தி சாலை வழியாக கார் சென்று கொண்டிருந்தது.

நேற்று காலை சிறுமுகை அடுத்துள்ள சம்பரவள்ளிபுதூர் பால்காரன் சாலை அருகே சென்ற போது காரை ஓட்டிச்சென்ற சுவாமி (40) தூங்கியதாக கூறப்படுகிறது. இதனால், எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர புளியமரத்தின் மீது மோதியது. இதில் காரில் வந்த நாகராஜ், வெங்கடாத்திரி உள்ளிட்ட 2 பேரும் சம்பவ இடத்தில் பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தனர். மகேஷ்குமார், துரைசாமி, சுவாமி ஆகியோர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த சிறுமுகை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான 2 பேர் உடலை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயமடைந்த மகேஷ்குமார், துரைசாமி, சுவாமி ஆகிய 3 பேரையும் அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

The post சபரிமலைக்கு சென்று திரும்பியபோது சோகம் கார் மரத்தில் மோதி ஐயப்ப பக்தர்கள் 2 பேர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Read Entire Article