சபரிமலை சீசனையொட்டி கேரளாவுக்கு அனுப்பப்படும் பொள்ளாச்சி இளநீருக்கு மவுசு: உற்பத்தி அதிகரிப்பால் மேலும் விலை குறைந்தது

2 months ago 11


பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதியிலிருந்து கேரளாவுக்கு சபரிமலை சீசனையொட்டி, இளநீர் அனுப்புவது தொடர்ந்து அதிகரித்துள்ளது. உற்பத்தி அதிகரிப்பால் விலை மேலும் சரிந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள தென்னைகளில் உற்பத்தியாகும் பச்சை நிற இளநீர் மற்றும் செவ்விளநீர் உள்ளிட்டவை ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தின்போது சென்னை, மதுரை, திண்டுக்கல், கடலூர், தூத்துக்குடி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு வெளி மாவட்டங்களுக்கும், ஆந்திரா மற்றும் கர்நாடகா, டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக இளநீரின் தேவை நாளுக்குநாள் அதிகரித்தது.

பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியிலிருந்து லாரி மற்றும் டெம்போக்கள் மூலம் வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்யப்பட்டு அதிக அளவில் இளநீர் அனுப்பி வைக்கப்பட்டன. இதில் செவ்விளநீர் விற்பனையே அதிகமாக இருந்தது. ஆனால் மே மாதம் கோடை மழை காரணமாகவும், ஆகஸ்ட் மாதம் தொடர்ந்து பெய்த தென்மேற்கு பருவமழை காரணமாகவும் இளநீரின் தேவை குறைந்தது. இதன் காரணமாக வெளியூர்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும் இளநீரின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்தது. கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் மழை குறைந்ததால் மீண்டும் இளநீர் விற்பனை சூடுபிடித்தது. ஆனால் கடந்த அக்டோபர் மாதம் இறுதியிலிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பெய்தது. இதன் காரணமாக இளநீர் விற்பனை குறைந்தது.

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் மழை அதிக அளவு பெய்தது. இதனால் பொள்ளாச்சி பகுதியிலிருந்து வெளியூர்களுக்கு இளநீர் அனுப்பும் பணி குறைந்தது. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழைக்கு பிறகு பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் உள்ள தென்னைகளில் நாளுக்கு நாள் இளநீர் உற்பத்தி அதிகரிக்க தொடங்கியது. எனவே குறைவான விலைக்கு இளநீர் அதிகளவு அனுப்பி வைக்கப்பட்டன. கடந்த சில வாரங்களாக டெல்லி, ஐதராபாத் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் பனி நிலவி வருகிறது. இருந்தபோதிலும் அம்மாநிலங்களுக்கு பொள்ளாச்சியிலிருந்து இளநீர் அனுப்பும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது பெய்து வரும் மழையால், பொள்ளாச்சியிலிருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு இளநீர் அனுப்பும் பணி சற்று மந்தமானது.

பனிப்பொழிவு உள்ளிட்ட சீதோஷ்ண நிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாகவும், இளநீர் உற்பத்தி அதிகரிப்பு காரணமாகவும், அதன் தேக்கத்தை தவிர்க்கவும் இளநீரின் விலை குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரூ.28ஆக இருந்த பண்ணை மொத்த விலை தற்போது ரூ.22ஆக சரிந்துள்ளது. இந்த நிலையில் தற்போது சபரிமலை சீசன் என்பதால் கேரளாவில் பொள்ளாச்சி இளநீருக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது. சபரிமலை சீசனையொட்டி அதிக அளவில் பக்தர்கள் கேரளாவுக்கு வருகின்றனர். இதனால் இளநீரின் தேவையும், விற்பனையும் அதிகரித்துள்ளது. எனவே பொள்ளாச்சி பகுதியிலிருந்து கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது. பொள்ளாச்சி பகுதி இளநீரை, சபரிமலைக்கு பல்வேறு பகுதியிலிருந்து வருவோர் அதிகம் விரும்புவதாக கூறப்படுகிறது. இதனால், கடந்த சில வாரமாக பொள்ளாச்சியிலிருந்து கேரளாவுக்கு அனுப்பப்படும் இளநீரின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.

தமிழ்நாட்டில் தேனி, கம்பம் உள்ளிட்ட பகுதியிலிருந்து கேரளாவிற்கு இளநீர் அனுப்பப்பட்டாலும், பொள்ளாச்சியிலிருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 50 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரையிலான இளநீர் அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டில் இளநீர் உற்பத்தி வழக்கத்தைவிட அதிகரிப்பால், குறைவான விலைக்கு விற்பனை செய்யவேண்டிய சூழ்நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். வரும் ஜனவரி மாதம் வரை இளநீர் உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரிப்பதுடன், அதன் விலையில் மேலும் சரிவு ஏற்படும் என்றும், இளநீர் தேக்கத்தை தவிர்க்க, பருவமழை குறைந்தபின் தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு கனரக வாகனங்கள் மூலம் இளநீர் அனுப்பும் பணி மீண்டும் தீவிரமாகும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

பொள்ளாச்சியிலிருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 50 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரையிலான இளநீர் அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டில் இளநீர் உற்பத்தி வழக்கத்தைவிட அதிகரிப்பால், குறைவான விலைக்கு விற்பனை செய்யவேண்டிய சூழ்நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

The post சபரிமலை சீசனையொட்டி கேரளாவுக்கு அனுப்பப்படும் பொள்ளாச்சி இளநீருக்கு மவுசு: உற்பத்தி அதிகரிப்பால் மேலும் விலை குறைந்தது appeared first on Dinakaran.

Read Entire Article