ஐதராபாத்: சன்ரைசர்ஸ் அணியுடனான போட்டியில் நேற்று, டெல்லி அணி, 7 விக்கெட் இழப்புக்கு 133 ரன் எடுத்தது. ஐபிஎல் 18வது தொடரின் 55வது லீக் போட்டி, ஐதராபாத்தில் நேற்று நடந்தது. அதில், சன்ரைசர்ஸ் ஐதராபாத், டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய டெல்லி அணியின் துவக்க வீரர்களாக கருண் நாயர், ஃபாப் டூப்ளெஸிஸ் களமிறங்கினர். துவக்க ஓவரை வீசிய பேட் கம்மின்ஸ் வீசிய முதல் பந்தை தடுத்தாடிய கருண் நாயர், இஷான் கிஷணிடம் கேட்ச் தந்து வெளியேறினார். அதையடுத்து, அபிஷேக் பொரெல், டூப்ளெஸிசுடன் இணை சேர்ந்தார். பின், 3ம் ஓவரை வீசிய கம்மின்சின் முதல் பந்தில் டூப்ளெஸிஸ் (3 ரன்), இஷானிடம் கேட்ச் தந்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, கம்மின்ஸ் வீசிய 5வது ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட பொரெல், இஷான் கையில் பந்தை பறிகொடுத்து வெளியேறினார். அதனால், 15 ரன்களுக்குள் 3 விக்கெட் இழந்த டெல்லி, அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல் திக்குமுக்காடியது.
இந்த களேபரம் அடங்கும் முன், ஹர்சல் படேல் வீசிய அடுத்த ஓவரிலேயே, டெல்லி கேப்டன் அக்சர் படேல் (6 ரன்), கம்மின்சிடம் கேட்ச் தந்து நடையை கட்டினார். அவரைத் தொடர்ந்து, ஜெய்தேவ் உனத்கட் வீசிய 8வது ஓவரின் முதல் பந்தில், கே.எல்.ராகுல் (10 ரன்), இஷானிடம் கேட்ச் தந்து டெல்லி ரசிகர்களை நோகடித்தார். அப்போது அணியின் ஸ்கோர் 5 விக்கெட் இழப்புக்கு 29. பின்னர், விப்ரஜ் நிகாமும், டிரிஸ்டன் ஸ்டப்சும் இணை சேர்ந்து ஆடினர். இவர்கள் நிதானமாக ஆடி 30 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், ஜீசன் அன்சாரி வீசிய 13வது ஓவரின்போது, விப்ரஜ் நிகாம் (18 ரன்), 6வது விக்கெட்டாக ரன் அவுட்டானார். அதன் பின், ஸ்டப்சுடன், அசுதோஷ் சர்மா இணை சேர்ந்தார்.
இவர்களின் பொறுப்பான, அதிரடி ஆட்டத்தால், 16.5 ஓவரில் டெல்லி அணி 100 ரன்களை எட்டியது. மேலும், 35 பந்துகளில் இவர்கள் 50 ரன்களை கடந்தனர். தொடர்ந்து, ஈஷன் மலிங்கா வீசிய 20வது ஓவரில் அசுதோஷ் சர்மா (41 ரன்) அவுட்டானார். 20 ஓவர் முடிவில், டெல்லி அணி, 7 விக்கெட் இழப்புக்கு 133 ரன் எடுத்தது. சன்ரைசர்ஸ் தரப்பில், பேட் கம்மின்ஸ் 3, உனத்கட், ஹர்சல் படேல், மலிங்கா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். அதையடுத்து, 134 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி களமிறங்கியது.
The post சன்ரைசர்ஸ் அனல் கக்கும் பந்து வீச்சு 133 ரன்னில் சுருண்ட டெல்லி appeared first on Dinakaran.