கொல்கத்தா: ஐபிஎல் 18வது சீசனில் நேற்றிரவு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் 15வது லீக் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் பேட் கம்மின்ஸ், பவுலிங்கை தேர்வு செய்தார். கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக்-சுனில்நரைன் களமிறங்கினர்.
ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில் 2வது ஓவரை வீசிய கம்மின்ஸ், டி காக்கை 1 ரன்னில் வெளியேற்றினார். 3வது ஓவரில் முகமது ஷமி பந்தில் நரைன் 7 ரன்னில் கீப்பர் க்ளாசெனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 3வது விக்கெட்டிற்கு கொல்கத்தா கேப்டன் ரஹானே-ரகுவன்சி ஜோடி நிலைத்து நின்று ஆடியது. சிக்சர், பவுண்டரிகளாக விளாசிய நிலையில், 11வது ஓவரில் ரஹானே 38 ரன்னில் ஜீஷன் அன்சாரி பந்தில் கீப்பர் க்ளாசெனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
மறுமுனையில் நிலைத்து ஆடிய ரகுவன்சி 30 பந்தில் 50 ரன் (அரை சதம்) எடுத்தார். கமிந்துமென்டீஸ் வீசிய அடுத்த பந்தில், ரகுவன்சி விக்கெட்டை பறிகொடுத்தார். அவரது கேட்சை ஹர்ஷல் பட்டேல் அபாரமாக பிடித்தார். 5வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த வெங்கடேஷ் ஐயர்-ரிங்குசிங் ஜோடி, சன்ரைசர்ஸ் பந்துவீச்சை நாலாபுறமும் அடித்து ஆடினர். இதனால் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது. கடைசி ஓவரில் அதிரடியாக ஆடிவந்த வெங்கடேஷ் ஐயர் 60 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதி ஓவரின் கடைசி பந்தில் ரஸல் 1 ரன்னில் ரன்அவுட் ஆனார். இதனால், 20 ஓவர் முடிவில் கொல்கத்தா 6 விக்கெட் இழப்பிற்கு 200 ரன் குவித்தது. ரிங்கு சிங் அவுட் ஆகாமல் 32 ரன்னில் களத்தில் இருந்தார். சன்ரைசர்ஸ் தரப்பில் முகமது ஷமி, பேட் கம்மின்ஸ், கிஷன் அன்சாரி, கமிந்து மென்டிஸ், ஹர்ஷல்பட்டேல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 201 ரன்னை வெற்றி இலக்காக கொண்டு, சன்ரைசர்ஸ் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக இம்பேக்ட் பிளேயர் ட்ராவிஸ் ஹெட்-அபிஷேக் சர்மா இறங்கி துரத்தலை தொடங்கினர்.
The post சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டி; கொல்கத்தா 200 ரன் குவிப்பு: ரகுவன்சி, வெங்கடேஷ் ஐயர் அரைசதம் appeared first on Dinakaran.