
ராமநவமியை முன்னிட்டு சென்னை கவர்னர் மாளிகையில் கம்ப ராமாயண திருவிழா நடந்தது. இந்த விழாவிற்கு கவர்னர் ஆர்.என். ரவி தலைமை தாங்கினார். இதில் 40-க்கும் மேற்பட்ட கம்பர் கழகங்கள், 35 தமிழறிஞர்கள் கலந்து கொண்டனர். இதற்காக கவர்னர் மாளிகையில் அமைக்கப்பட்டு இருந்த ராமர் தொடர்பான கண்காட்சியினை கவர்னர் ரவி பார்வையிட்டார். பின்னர் விழாவில் பேசிய அவர் கூறியதாவது:-
நமது நாட்டில், ராமரின் கதைகள் அனைத்து இடங்களிலும் ஒலித்து வருகின்றன. ராமர் ஒவ்வொரு குடிமக்களின் இதயத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ராமலீலா மற்றும் தெருக்கூத்து போன்றவற்றின் வழியாக, நம் முன்னோர்கள் ராமரின் பெருமையை மக்களிடம் எடுத்துச் சென்றுள்ளனர். வால்மீகி ராமாயணத்தை சமஸ்கிருதத்தில், பண்டிதர்களின் மொழியில் எழுதினார்.
ஆனால் கம்பர், அனைத்து சாதாரண மக்களும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் செழுமையும், பழமையும் வாய்ந்த மொழியில் தமிழ் மொழியில் எழுதி உள்ளார். இது மற்ற புலவர்களுக்கும், தங்களது மொழியில் ராமாயணத்தை எழுதுவதற்கு தூண்டுகோலாக இருந்தது.
ராமாயணம் ஒரு மகாகாவியமும், தெய்வீக காவியமும் ஆகும். இதில் மகாவிஷ்ணுவின் அவதாரமான ராமர், ஒரு சாதாரண மனிதனுக்கு ஏற்படும் எல்லா வேதனைகளையும், துக்கங்களையும், சந்தோஷங்களையும் அனுபவித்தது பற்றி விரிவாக விவரிக்கப்பட்டு உள்ளன. கம்ப ராமாயணம், மனித வாழ்க்கையை தர்மத்துடன், தன்னிறைவு மற்றும் சீரான முறையில் வாழ வழிகாட்டும் ஒரு நூலாகும்.
இது தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம் மற்றும் சமூகத்தில் நெறியோடு வாழ்வதற்கும், ஒருவரை ஒருவர் உதவிக்கரமாக வாழ்வதற்குமான வழிமுறையை கூறுகிறது. கம்பர் "ஒரு பாரத நாயகனும் மக்கள் குருவும்" ஆவார். தமிழகம், கம்ப ராமாயணம் எனும் மகத்தான காவியம் எழுதப்பட்ட புனித மண். ஆனால் இதன் மீது மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை.
ஆனால், இங்கு ராமர் ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் வாழ்கிறார். அரவிந்தர், இந்தியாவை "பாரத சக்தி" என அழைத்தார், சனாதன தர்மம் என்பது இந்தியாவின் அடையாளம். இதனை நாம் மதிக்க வேண்டும், பாராட்ட வேண்டும், கொண்டாட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.