
ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை ஸ்தலத்தில் மங்களநாத சுவாமி – மங்களேஸ்வரி அம்மன் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 4-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானம், தமிழக அரசு மற்றும் நன்கொடையாளர்கள் மூலம் வழங்கப்பட்ட பல கோடி ரூபாய் நிதி மூலம் திருப்பணிகள் முடிவடைந்துள்ளன. 4-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணியில் இருந்து 11 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு கோவிலில் அமைந்துள்ள அபூர்வ மரகத நடராஜர் சன்னதியானது நேற்று நள்ளிரவு திறக்கப்பட்டு மரகத நடராஜர் சிலை மீது பூசப்பட்ட சந்தனம் களையப்பட்டது. அப்போது திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
2010-ல் கும்பாபிஷேகம் நடந்தபோதும் பச்சை மரகத நடராஜருக்கு பூசப்பட்டிருந்த சந்தனக்காப்பு களையப்பட்டு மூன்று நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அதேபோன்று இந்த ஆண்டு கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சந்தனக்காப்பு களையப்பட்டு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
கும்பாபிஷேக தினமான 4-ம் தேதி வரை சந்தனாதி தைலம் பூசப்பட்ட பச்சை மரகத நடராஜரை பொதுமக்கள் தரிசனம் செய்யலாம். கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் மாலையில் சந்தனம் சார்த்தப்பட்டு மீண்டும் நடராஜர் சன்னதி சார்த்தப்படுகிறது.