
பஸ்தார் (சத்தீஸ்கர்) ,
சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் நேற்று சரக்கு வாகனம் ஒன்று கவிழ்ந்த விபத்தில் சிக்கி 5 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக அம்மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஏ.எஸ்.பி). மகேஷ்வர் நாக் கூறுகையில், ஜக்தல்பூரில் உள்ள தர்பா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சந்தமேட்டா கிராமத்திற்கு அருகே சுமார் 45 பேரை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் விபத்துக்குள்ளானது" என்று அவர் கூறினார்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக விபத்து மருத்துவ அதிகாரி திலிப் காஷ்யப் கூறுகையில், "மாலை 4:30 மணியளவில் விபத்து பற்றிய தகவல் எங்களுக்கு கிடைத்தது. இதுவரை காயமடைந்த 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் ஒருவர் வரும் வழியில் இறந்தார்" என்று அவர் கூறினார்.
மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் மருத்துவ அதிகாரி திலிப் காஷ்யப் தெரிவித்தார்.