சதம் அடிக்க வேண்டும் என்ற அவசரகதியில் விக்கெட்டை பறிகொடுத்தீர்களா..? - சுப்மன் கில் பதில்

3 hours ago 2

நாக்பூர்,

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி டி20 தொடரை 1-4 (5 போட்டிகள்) என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகிறது. இதன்படி இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 47.4 ஓவர்களில் 248 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பட்லர் 52 ரன்களும், ஜேக்கப் பெத்தேல் 51 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் ஜடேஜா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 249 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 38.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் அடித்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் சுப்மன் கில் 87 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 59 ரன்களும், அக்சர் படேல் 52 ரன்களும் அடித்து வெற்றிக்கு உதவினர். சுப்மன் கில் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி கொண்டிருந்த சுப்மன் கில் 87 ரன்களில் இருந்தபோது தவறான ஷாட் அடித்து விக்கெட்டை பறிகொடுத்தார். அந்த சமயத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது. அதே சமயம் கில்லின் சதத்திற்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. இதனால் சதம் அடிக்க வேண்டும் என்ற அவசரகதியில் சுப்மன் கில் விக்கெட்டை பறிகொடுத்தார் என்று விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் அந்த போட்டி முடிந்தவுடன் பத்திரிகையாளர் சந்திப்பில் சதம் அடிக்க வேண்டும் என்ற அவசரகதியில் விக்கெட்டை பறிகொடுத்தீர்களா? என்று சுப்மன் கில்லிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த சுப்மன் கில், "நான் சதம் அடிக்க வேண்டும் என்று நினைத்து அந்த ஷாட்டை விளையாடவில்லை. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்த நினைத்தேன். எதிரணியின் பீல்டிங் எப்படி இருக்கிறது என்பதை கவனித்து, அதற்கு ஏற்ப ஷாட்டை தேர்வு செய்து விளையாடினேன். 60 ரன்களில் இருந்திருந்தாலும் கூட இதே மாதிரியான ஷாட்டைத்தான் அடித்து இருப்பேன். நாட்டுக்காக போட்டியை வெல்வதுதான் முக்கியம்" என்று கூறினார்.

Read Entire Article