சுக்மா: சட்டீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய 2என்கவுன்டரில் 11 பெண் நக்சல்கள் உட்பட 18 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் காயமடைந்தனர். சட்டீஸ்கரில் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. சுக்மா மாவட்டத்தில் உள்ள கெர்லாபால் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுப்பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புபடையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு அங்கு பாதுகாப்பு படையினரின் கூட்டுக்குழு விரைந்தது. மாவட்ட ரிசர்வ் படையினர், மத்திய ரிசர்வ் படையினர் இணைந்த குழு காட்டுப்பகுதிக்குள் தீவிர நக்சல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது பதுங்கி இருந்த நக்சல்கள் வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதனை தொடர்ந்து வீரர்கள் கொடுத்த பதிலடியில், 11 பெண் நக்சல்கள் உட்பட 18 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவரும் தலைக்கு ரூ.25லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டு இருந்த நக்சல் ஜக்தீஷ் என்பவரும் பலியானார். சம்பவ இடத்தில் இருந்து 18 நக்சல்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் ஏகே 47, எஸ்எல்ஆர், ஐஎன்எஸ்ஏஎஸ் ரைபிள், 303 ரைபிள், ராக்கெட் லாஞ்சர் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகின்றது. இந்த மோதலில் 4 டிஆர்ஜி வீரர்களும் காயமடைந்தனர். காயமடைந்த வீரர்கள் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்ட நக்சல்களின் அடையாளம் காணப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து பிஜப்பூர் மாவட்டத்தில் போலீசாரின் என்கவுன்டரில் ஒரு நக்சல் பலியானார். சட்டீஸ்கருக்கு பிரதமர் மோடி இன்று வருகை தர இருந்த நிலையில் இந்த என்கவுன்டர்கள் நடந்துள்ளது. கடந்த பத்து நாட்களில் இது இரண்டாவது பெரிய என்கவுன்டர் ஆகும். மார்ச் 20 அன்று, பிஜாப்பூர்-தந்தேவாடா பகுதியில் 26 நக்சல்கள் கொல்லப்பட்டனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து, பிஜாப்பூர், சுக்மா மற்றும் தண்டேவாடா உள்ளிட்ட ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தர் பகுதியில் பாதுகாப்புப் படையினரால் குறைந்தது 116 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆயுதத்தால் மாற்றம் வராது
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘‘சுக்மா என்கவுன்டரை நடத்திய பாதுகாப்பு படையினருக்கு பாராட்டுக்கள். 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நக்சல்களை ஒழிக்க அரசு உறுதியாக உள்ளது. ஆயுதங்கள் வைத்திருப்பவர்களுக்கு எனது வேண்டுகோள் என்னவென்றால் ஆயுதங்களும், வன்முறையும் மாற்றத்தை கொண்டு வர முடியாது. அமைதி மற்றும் வளர்ச்சியால் மட்டுமே மாற்றத்தை கொண்டு வர முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
The post சட்டீஸ்கரில் மீண்டும் அதிரடி; 18 நக்சல்கள் என்கவுன்டரில் பலி: 4 வீரர்கள் காயம் appeared first on Dinakaran.