சட்டீஸ்கரில் பாஜக அரசின் மாதம் ரூ.1,000 திட்டம்; பெண் பயனாளி பெயர் சன்னி லியோன்?: ஊழல் நடப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

3 weeks ago 6

பஸ்தர்: சட்டீஸ்கரில் பாஜக அரசின் மாதம் ரூ.1,000 திட்டத்தில் பெண் பயனாளி பெயர் சன்னி லியோன் என்று குறிப்பிட்டுள்ளதால், இத்திட்டத்தில் ஊழல் நடப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. சட்டீஸ்கர் மாநிலத்தில் பழங்குடியின தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான விஷ்ணு தியோ சாய் தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கிறது. அம்மாநிலத்தில் மகதாரி வந்தனா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து கடந்த 10 மாதங்களாக ஒவ்வொரு மாதமும் 1,000 ரூபாய் சம்பந்தப்பட்ட பெண் பயனாளியின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது.

இத்திட்டத்தின்படி பஸ்தர் மாவட்டத்திற்கு உட்பட்ட பயனாளிகள் பட்டியலில் ெபண் பயனாளி ஒருவரின் பெயர் சன்னி லியோன் (உண்மையான பெண் பயனாளியின் பெயருக்கு பதிலாக பாலிவுட் நடிகையின் பெயர்) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த தகவல் குறிப்பிட்டுள்ள நிலையில், சன்னி லியோனின் கணவராக ஜானி சீன்ஸ் என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்த திட்டத்தில் பாஜக அரசு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து சட்டீஸ்கர் காங்கிரஸ் தலைவர் தீபக் ஜெயின் கூறுகையில், ‘மகதாரி வந்தனா யோஜனா திட்டத்தின்கீழ் சட்டீஸ்கர் பெண் பயனாளியின் புகைப்படம் இருக்கும் இடத்தில், சன்னி லியோன் படம் உள்ளது. யார் இந்த சன்னி லியோன்? அவருடைய கணக்கில் அரசு பணம் செலுத்துகிறதா? இதற்கு யார் பொறுப்பு என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும். சன்னி லியோனுக்கு பணம் கொடுக்கும் அரசு, நடிகை கரீனா கபூரின் பெயரில் பணத்தை அனுப்பவில்லையா? என்று விசாரிக்க வேண்டும்.மகதாரி வந்தனா யோஜனா என்ற பெயரில் மாபெரும் ஊழல் நடந்து வருகிறது’ என்றார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த பாஜக எம்எல்ஏ சுஷாந்த் சுக்லா, ‘இந்த திட்டம் வரலாற்று சிறப்புமிக்கது. சன்னி லியோன் புகைப்படம் வெளியானது குறித்து விசாரிக்கப்படும்’ என்றார்.

The post சட்டீஸ்கரில் பாஜக அரசின் மாதம் ரூ.1,000 திட்டம்; பெண் பயனாளி பெயர் சன்னி லியோன்?: ஊழல் நடப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Read Entire Article