
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவருடைய மகனும், கட்சியின் தலைவருமான டாக்டர் அன்புமணிக்கும் இடையே கட்சி விவகாரம் தொடர்பாக மோதல் போக்கு நிலவி வருகிறது.
இதனிடையே கும்பகோணத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசுகையில், அன்புமணி பெயருக்கு பின்னால் எனது பெயரை பயன்படுத்தக்கூடாது. தேவையென்றால் இனிஷியலை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.
இந்த நிலையில் சென்னையில் இருந்து டாக்டர் அன்புமணி நேற்று இரவு 8.10 மணியளவில் திடீரென காரில் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்துக்கு சென்றார். அப்போது அங்கு இருந்த செய்தியாளர்கள், அன்புமணியை வழிமறித்து கேள்வி எழுப்பினர்.
ஆனால் அவர், பதில் ஏதும் தெரிவிக்காமல் உள்ளே சென்று விட்டார். அங்கு தனது தாயார் சரஸ்வதியை சந்தித்து 50 நிமிடங்கள் பேசினார். பின்னர் 9 மணிக்கு அங்கிருந்து அன்புமணி, காரில் ஏறி சென்னை நோக்கி சென்றார். டாக்டர் ராமதாஸ் கும்பகோணம் சென்றிருந்த நேரத்தில் தைலாபுரத்துக்கு வந்த அன்புமணி, தனது தாயாரை சந்தித்து பேசிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
முன்னதாக சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் அன்புமணி நேற்று மாலை மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில், வருகிற 25-ந்தேதி மேற்கொள்ள உள்ள தமிழக மக்கள் உரிமை மீட்பு பயண ஏற்பாடுகள் குறித்தும், கட்சியின் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் குறித்து பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.
மேலும், கட்சியின் அதிகாரம் தொடர்பாக தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் குறித்தும் ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. மேலும், வருகிற சட்டசபை தேர்தல் பணிகள் தொடர்பாகவும், உறுப்பினர் சேர்க்கை பணிகள் தொடர்பாகவும், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்களுக்கு அவர் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் பாமக கூட்டணி சேரும் அணி மிகப்பெரிய வெற்றிபெறும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மயிலாடுதுறையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசுகையில், "உங்களுக்காகத்தான் நான் இருக்கிறேன். உங்களை தவிர எனக்கு வேறு யாரும் இல்லை. சட்டமன்ற தேர்தலில் பாமக எந்த அணியுடன் கூட்டணி சேருகிறதோ அந்த அணி மிகப்பெரிய வெற்றி பெறும். தேர்தல் ஆணையத்தை அணுகும் விவகாரத்தில் இனி முறையாக, தெளிவாக நடவடிக்கை எடுக்கப்படும். இனிமேல் அனைத்தும் சரியாக முறையாக நடைபெறும்" என்று அவர் கூறினார்.