
சென்னை,
கன்னட திரைப்படமான ''கேடி - தி டெவில்'' படத்தின் தமிழ் டீசர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெறுகிறது. இதில், படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டிருக்கின்றனர். அப்போது கர்நாடகாவில் கமல்ஹாசனின் ''தக் லைப்'' படம் வெளியாகாதது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு இப்படத்தின் இயக்குனர் பதிலளிக்கையில்,
''தாய் மொழி என்பது தாய்போல. தாய் மொழியை தவறாக கூறினால் கோவம் வரும் இல்லையா. அவர்கள் மன்னிப்பை தானே எதிர்பார்க்கிறார்கள்.
மற்ற தமிழ் படங்கள் கர்நாடகத்தில் வெளியாகி கொண்டுதான் இருக்கின்றன. கமல் சார் நடித்த தக் லைப் படம் மட்டும் இந்த சர்ச்சையால் வெளியாகவில்லையே தவிர வேறு எந்த தமிழ் படமும் வெளியாகாமல் இல்லை'' என்றார்.
'ஆக்சன் கிங்' அர்ஜுனின் சகோதரி மகனான துருவா சர்ஜா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள பான் இந்திய திரைப்படம் 'கேடி - தி டெவில்'. இயக்குனர் 'ஷோமேன்' பிரேம் இயக்கத்தில் காளி என்ற கதாபாத்திரத்தில் துருவா நடிக்கும் இந்த படத்தை கே.வி.என். புரொடக்சன் தயாரித்துள்ளது. ரீஷ்மா நானையா கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு அர்ஜுன் ஜன்யா இசையமைத்துள்ளார்.