சென்னை: இந்து சமய அறநிலையத்துறை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று (23.04.2025) வினா – விடை நேரத்தின்போது, திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன் எழுப்பிய கேள்விக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதிலளித்தார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், சட்டமன்ற உறுப்பினர் .
துரை.சந்திரசேகரன் :
பேரவைத் தலைவரே, திருவையாறு தொகுதி, வீரசிங்கம்பேட்டையில் அமைந்துள்ள அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயிலுக்கு திருப்பணி செய்ய அரசு முன்வருமா?
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் :
பேரவை தலைவரே, உறுப்பினர் கோரிய அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோயில் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில். அந்த திருக்கோயிலில் மட்டும் 276 சிவலிங்கங்கள் அமைந்துள்ளன. இத்திருக்கோயில் திருப்பணிக்கு சுமார் 1.50 கோடி செலவில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டிருக்கின்றது. அந்த திருக்கோயிலில் போதிய நிதி இல்லை. 2012 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் அரசின் சார்பில் திருக்கோயில் திருப்பணிக்காக வழங்கப்படுகின்ற நிதி ஆறு கோடி ரூபாயை இந்த ஆண்டு முதல்வர் 10 கோடி ரூபாயாக உயர்த்தி கொடுத்து இருக்கின்றார். ஆகவே அந்த நிதியிலிருந்து அருள்மிகு வைத்தியநாத சாமி திருக்கோயில் திருப்பணி மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன் :
பேரவை தலைவர் , என்னுடைய திருவையாறு தொகுதியில் எல்லா கோயில்களிலும் திருப்பணிகள் நடைபெற்று வருகின்ற வேளையில் தொல்லியல் ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியம் குறிப்பிட்டதை போல இந்த வைத்தியநாத சுவாமி கோயில் மிகப் பழமை வாய்ந்த கோயில் ஆகும். வருமானம் இல்லாத அந்த கோயிலுக்கு குடமுழுக்கு செய்யப்படும் அமைச்சர் அறிவித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். அதேபோல கடுவெளியில் சித்தர் வாழ்ந்த ஊரான ஆகாச பிரகதீஸ்வரர் கோயிலும், திருவேந்தகுடி வேதபுரீஸ்வரர் ஆலயமும் திருப்பணி செய்யாமல் இருக்கின்றன. அதையும் இந்த ஆண்டு குடமுழுக்கு செய்ய அரசு முன் வருமா அறிய விரும்புகிறேன்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் :
பேரவை தலைவரே, உறுப்பினர் கோரி இருக்கின்ற அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில் என்பது கடுவெளி சித்தர் வழிபட்ட திருக்கோயில். இந்த திருக்கோயிலும் போதிய வருமானம் இல்லாததால் தமிழக முதல்வரால் வழங்கப்பட்டு இருக்கின்ற திருப்பணி நிதி ரூ.10 கோடியிலிருந்து இந்த திருக்கோயில் திருப்பணியும் வெகு விரைவில் மேற்கொள்ளப்படும். அதேபோல் அவர் கூறிய மற்றொரு திருக்கோயிலின் திருப்பணியும் இந்த ஆண்டு மேற்கொள்வதற்கு உண்டான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக் கொண்டு தமிழக முதல்வர் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி ஏற்பட்ட பிறகு இன்று நடைபெறும் 9 திருக்கோயில்களின் குடமுழுக்கையும் சேர்த்து இதுவரை ஒன்பது திருக்கோயில் குடமுழுக்கு நடந்து கொண்டிருக்கின்றன இதுவரையில் திராவிட மாடல் ஆட்சி ஏற்பட்ட பிறகு 2,857 திருக்கோயிலில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்று முடிந்திருக்கிறது என்பதை நல்ல ஒரு செய்தியையும் இந்த மன்றத்திலே பதிவு செய்கிறேன்.
சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன்:
பேரவை தலைவர், அமைச்சருக்கு நன்றி. அதேபோல என்னுடைய திருவையாறு தொகுதியில் வளம்பக்குடி முத்துமாரியம்மன் கோயில், நேமம் நல்லசேவு அய்யனார் திருக்கோயில் உள்ளது. விளிம்பு நிலை மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் திருமணங்களை நடத்திட தனியார் மண்டபங்களுக்கு வருகின்றபோது அதிகளவு செலவாகிறது. எனவே இந்த இரண்டு திருக்கோயிலிலும் சொந்தமான நிலம் இருக்கிறது. இரண்டு இடங்களிலும் திருமண மண்டபம் அமைத்துத்தர அரசு முன் வருமா என்பதை தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்:
பேரவை தலைவரே, உறுப்பினர் கோரிய அந்த அய்யனார் கோயிலில் ஏற்கனவே ஜிஐ சீட்டில் கூரை அமைக்கப்பட்ட 2000 சதுர அடியில் ஒரு மண்டபம் செயல்பாட்டில் உள்ளது. அதை கான்கிரீட் மண்டபமாக மாற்றி கட்டித் தருவதற்கு உண்டான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அவர் கூறிய மற்றொரு திருக்கோயிலுக்கு சொந்தமாக ஐந்து ஏக்கர் புஞ்சை நிலம் உள்ளது. ஆனால் இந்த திருக்கோயில் போதிய நிதி வசதி இல்லை. இருந்தாலும் அந்த திருக்கோயிலுக்கும் அவர் கூறிய அளவிற்கு மிகப்பெரிய மண்டபம் கட்ட முடியவில்லை என்றாலும், சிறிய அளவிலாவது ஒரு திருமண மண்டபத்தை கட்டி தருவதற்கு முயற்சிகள் மேற்கொள்வோம். ஒரு சிறிய தகவலாக இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இதுவரையில் ரூ.350 கோடி செலவில், 87 திருமண மண்டபங்கள் கட்டுவதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அதில் 8 திருமண மண்டபங்கள் பணி நிறைவுபெற்று பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இன்றைய தினம் சபையில் நகராட்சி நிர்வாகத்துறை கேள்வியின் பொழுது உறுப்பினர் உதயகுமார் ஒரு கேள்வி எழுப்பி இருந்தார். அதாவது சித்திரை திருவிழாவின் போது மாநகராட்சிக்கு திருக்கோயில் செலுத்த வேண்டிய பணம் செலுத்தப்படவில்லை என்றால் மாநகராட்சி சித்திரை திருவிழாவிற்கு அனுமதி வழங்காது என்ற ஒரு கருத்தை தெரிவித்து அதற்கு விளக்கம் கேட்டிருந்தார். 2013-2014 ஆம் நிதியாண்டு முதல் 2017 – 2018 ஆம் நிதியாண்டு வரையில் மாநில கணக்காய்வு குழுவின் அறிக்கையின்படி ஐந்து ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டிய கட்டணம் நிலுவையில் இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நிலுவைத் தொகையை மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் மற்றும் அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோயில் ஆகிய இரு திருக்கோயில்கள் சார்பில் நேற்றைய தினம் கட்டி இருக்கின்றோம்.
இதுபோன்று திருவிழாக்கள் நடக்கின்ற மாவட்டங்களில் குறிப்பாக திருவண்ணாமலையில் நடைபெறுகின்ற தீபத் திருவிழாவின் போது துப்புரவுப்பணிகள், சுகாதாரம், கூடுதலாக செலவாகின்ற மின்சாரப் பணிகளுக்கு ரூ.1.50 கோடி அளவிற்கு திருக்கோயிலில் இருந்து தான் தந்து கொண்டிருக்கின்றோம். அந்த வகையில், முதல்வர் கவனத்திற்கு வந்தவுடன் இந்த பிரச்சனைக்கும் நேற்றைய தினமே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. சித்திரை திருவிழா கள்ளழகர் பச்சை உடையணிந்து மிக அழகாக, ஆனந்தமாக, மகிழ்ச்சியோடு 12ஆம் தேதி ஆற்றில் இறங்குவார் என்பதை உறுப்பினருக்கு பதிலாக தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்தார்.
சட்டப்பேரவை, உறுப்பினர் துரை. சந்திரசேகரன்,
The post சட்டப்பேரவையில் உறுப்பினர் துரை. சந்திரசேகரன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதில்..!! appeared first on Dinakaran.