சென்னை: சட்டப்பேரவையில் நேற்று அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர் பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்கள் ஒரு நாள் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தமிழ்நாட்டில் பொது அமைதி நிலவுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவை நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எழுந்து, ஒரு பொருள் குறித்து பேச அனுமதிக்க வேண்டும் என்றார்.
* சபாநாயகர் அப்பாவு: எதிர்க்கட்சி தலைவர் இதுகுறித்து அறிவிப்பு ஏதும் தரவில்லை. அதனால், பேச அனுமதிக்க முடியாது.
* அவை முன்னவர் துரைமுருகன்: ஒரு செய்தியைப் பற்றி முன்கூட்டியே சொன்னால் தவறில்லை. ஆனால், இதுபோன்ற பொருளை நாங்கள் எழுப்பப்போகிறோம் என்று எதிர்க்கட்சி சார்பாக எத்தனை மணிக்கு கேட்டார்கள். நீங்கள் எத்தனை மணிக்கு அனுமதி அனுமதி கொடுத்தீர்கள்?
* சபாநாயகர் அப்பாவு: எதிர்க்கட்சிக் கொறடா, காலை 9.18 மணிக்கு வந்து, பொத்தாம்பொதுவாக காவல் துறையைப் பற்றி ஜூரோ அவரில் எழுப்ப போகிறோம் என்று சொன்னார்கள். விஷயத்தை சொல்லாமல் எப்படி அனுமதிக்க முடியும் என்று கேட்டேன்.
* அவை முன்னவர் துரைமுருகன்: நீங்களே சொல்லுங்கள். என்ன எழுப்பப் போகிறோம் என்பது குறித்து முன்கூட்டியே சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு தெரிவிக்க வேண்டும் என்று நான் அன்றைக்கே சொன்னேன். அமைச்சரிடம் அதற்கான விவரம் இல்லையென்றால், நீங்கள் எடுக்கக்கூடாது. ரெடி என்றால் தான் எடுக்க வேண்டும். ஆனால், திடீரென்று காவல் துறையைப் பற்றி பேசினால் எப்படி அனுமதிக்க முடியும்.
* அமைச்சர் எ.வ.வேலு: ஏற்கனவே இதே சட்டமன்றத்தில் நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது, முன்கூட்டியே தகவல் கொடுத்தால்தான் அமைச்சரிடத்தில் பதில் வாங்கி எங்களால் தர முடியும் என்று இப்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய முன்னாள் சபாநாயகர் தனபால் ஏற்கனவே பலமுறை சொல்லியிருக்கிறார். எனவே, முன்கூட்டியே சொன்னால் தான் அமைச்சர்கள் பதில் சொல்ல முடியும். அதிலும், குறிப்பாக சட்டம்-ஒழுங்கு பற்றி சொல்கிறபோது, இது முதல்வரின் துறை என்கிற காரணத்தினால், பதில் வாங்கித்தானே சொல்ல முடியும். ஏற்கெனவே, அவர்கள் என்ன விதியை சொன்னார்களோ அந்த விதியைத்தான் நாம் கடைபிடிக்கிறோமே தவிர புதிததாக நாம் எந்தவொரு விதியையும் கடைபிடிக்கவில்லை.
* சபாநாயகர் அப்பாவு: இன்றைக்கு இருக்கக்கூடிய நிலைமை பற்றியும் சொல்லியிருக்கிறோம். சபையை அவரவர்கள் நினைப்பது போன்று எல்லாம் நடத்த முடியாது. அரை மணிநேரத்திற்கு முன்பு என் அறைக்கு வந்து, இந்த பொருள் குறித்து இன்றைக்கு எங்களுடைய எதிர்கட்சி தலைவர் ஜூரோ அவரில் பேசவிருக்கிறார் என்று எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர் எவரேனும் வந்து கூறினால், அதன் அடிப்படையில் எடுத்துக்கொள்ளப்படும்.
அதனால், இன்றைக்கு இது தேவையில்லை. ஏற்கனவே அமைச்சர்கள் 4 பேர் இன்றைக்கு பதிலுரையாற்ற வேண்டியிருக்கிறது. அப்போது அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கூச்சலிட்டனர். மேலும் வாய்ப்பு கொடு, வாய்ப்பு கொடு எதிர்க்கட்சி தலைவரை பேச வாய்புக்கொடு என்று முழக்கமிட்டனர். இதனால், அவையில் அமளி உருவானது.
* சபாநாயகர் அப்பாவு: அறிவிப்பே கொடுக்காமல் என்னைப் பேச அனுமதிக்க வேண்டும் என்றால், எப்படி அனுமதிக்க முடியும் சொல்லுங்கள். இதற்கிடையில் துணை முதல்வர் உதயநிதியை துறை மீதான விவாத்திற்கு பதிலுரை அளிக்கும்படி சபாநாயகர் அப்பாவு அழைத்தார். இதை தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலுரை அளிக்க தொடங்கினார். அவர் பதிலுரை அளிக்க தொடங்கியதும் அவரது பேச்சுக்கு திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் மேஜையை தட்டி வரவேற்பு தெரிவித்தனர். இது அமளியில் ஈடுபட்ட அதிமுகவினலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருந்தது.
* அவை முன்னவர் துரைமுருகன்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுவதற்கு அமைதி செய்து கொடுக்க வேண்டும்.
* முதல்வர் மு.க.ஸ்டாலின்: உங்களிடத்தில் அனுமதி பெற்று, முன்கூட்டியே தெரிவித்துவிட்டு, எழுதிக்கொடுத்துவிட்டுதான் பேச வேண்டும் என்பது மரபு. அது நேரமில்லா நேரத்தில் எடுக்கக்கூடிய பிரச்னையாக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பு தர வேண்டும் என்பது விதிமுறையில் இருக்கிறது. மரபுப்படி கடைபிடித்துக்கொண்டிருக்கிறோம். அப்படி கடைபிடித்தால் அனுமதியுங்கள். இல்லை என்றால், அனுமதிக்கக் கூடாது. இன்னொன்றையும் சொல்லிக்கொள்கிறேன்.
அவர்கள் கேட்கக்கூடிய கேள்விக்கு நான் பதில் சொல்வதற்கு தயாராக இருக்கிறேன். அதில் எந்த மாற்றமும் கிடையாது. நான் தொலைக்காட்சியைப் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என்று சொல்வதற்கு தயாராக இல்லை. (தொடர்ந்து பேச அனுமதிக்க வேண்டும் என்று அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அதிமுக உறுப்பினர்கள் சபாநாயகர் அப்பாவுவை பார்த்து கைநீட்டி பேசிக்கொண்டிருந்தனர்.)
* முதல்வர் மு.க.ஸ்டாலின்: பேரவைத் தலைவரை கைநீட்டி, அச்சுறுத்துவதுபோன்று பேசுவது மரபல்ல. நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* சபாநாயகர் அப்பாவு: நீங்கள் எல்லோரும் உட்காருங்கள், இல்லை என்றால் நடவடிக்கை எடுப்பேன். இல்லை நீங்கள் நினைத்த நேரத்திற்கு எல்லாம் எதுவும் செய்ய முடியாது. நீங்கள் உங்கள் பிரச்சினைகளை எல்லாம் இங்கே பேச முடியாது. உங்களுக்குள்ள பிரச்னை எல்லாம் இங்கே தீர்க்க முடியாது. இந்த சபைக்கொரு மரபு இருக்கிறது. அதன்படிதான் செயல்பட முடியும். நீங்கள் நினைத்த நேரத்தில், நினைத்ததையெல்லாம் பேச அனுமதி தர மாட்டேன். நீங்கள் உட்காருங்கள், இல்லை என்றால் நடவடிக்கை எடுப்பேன்.
சபாநாயகர் அப்பாவு இவ்வாறு கூறியும் அதிமுகவினர் இருக்கையில் அமராமல் கோஷமிட்டு கொண்டிருந்தனர். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு, அதிமுக உறுப்பினர்கள் அனைவரையும் சபைக் காவலர்கள் வெளியேற்றும்படி உத்தரவிட்டார். இதையடுத்து சபைக் காவலர்கள் மூலம் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு பேசுகையில், ‘இந்த அவையில் தொடர்ந்து கூச்சல்-குழப்பம் ஏற்படுத்தி, எதிர்க்கட்சித் தலைவர் செயல்படுவது என்பது நாகரிகம் அல்ல.
இது எல்லாம் வன்மையாகக் கண்டிக்கக்கூடியது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவது எதுவும் அவைக் குறிப்பில் ஏறாது. ஏற்கனவே நீங்கள் திட்டமிட்டு இந்த அவையில், குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்து வந்திருக்கின்றீர்கள். குழப்பத்தில் ஈடுபட்டுள்ள அனைவரையும் இன்று நாள் முழுவதும் அவையை விட்டு வெளியேற்றுகிறேன்’ என்று உத்தரவிட்டார். தொடர்ந்து சட்டசபை லாபியில் அதிமுக எம்எல்ஏக்கள் கோஷம் எழுப்பி கொண்டிருந்தனர்.
இதையடுத்து அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரையும் லாபியில் இருந்து வெளியே அனுப்புங்கள் என்று அவை காவலருக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் லாபியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அதன் பிறகே சட்டசபையில் அமைதி திரும்பியது. அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டபோது ஓபிஎஸ் அணியை சேர்ந்த எம்எல்ஏக்கள் இருக்கையில் அமர்ந்து இருந்தனர். தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
இந்த அவைக்கும், அவையின் மூலம் நாட்டு மக்களுக்கும் நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, தமிழ்நாட்டில் பொது அமைதி நிலவுகிறது. பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏதுமின்றி, மக்கள் அமைதியாக, இணக்கமாக வாழ்கிறார்கள். இதனால்தான் தொழில் முதலீடு, புதிய தொழிற்சாலைகள், இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் என தமிழ்நாடு முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
இந்த நேர்மறையான சூழலைத் தாங்கிக்கொள்ள முடியாத சில மாநில விரோத சக்திகள், தமிழ் மக்கள் விரோத சக்திகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கக்கூடிய கொலை, கொள்ளை போன்ற ஒரு சில நிகழ்வுகளை ஊதிப் பெரிதாக்கி, மக்களை பீதியில் வைக்க இரவு பகலாக மக்களின் பாதுகாப்பிற்காக உழைத்துக் கொண்டிருக்கும் நம்முடைய தமிழ்நாட்டு காவல்துறைக்கு இழுக்கு ஏற்படுத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். அதற்கு பிரதான எதிர்கட்சியும் துணை போகிற வகையில் தூபம் போடுகிறது. சில ஊடகங்களும், பத்திரிக்கைகளும் சேர்ந்து துணை போவது இன்னும் வேதனை அளிக்கிறது.
தமிழ்நாடு அரசின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தி விடமுடியுமா என துடிக்கிறார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் எத்தகைய கலவரங்கள் நடைபெற்றன என்பது அனைவருக்கும் தெரியும். அதுபோன்ற எந்தக் கலவரமும் இந்த ஆட்சியில் இல்லை. குற்றங்களின் எண்ணிக்கை இந்த ஆட்சியில் குறைந்து வருகிறது. புகார்களின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வழக்குகள் போடப்படுகின்றன. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுகிறார்கள். எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஆளுங்கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவர்கள் மீது வழக்கு போடப்படுகிறது; தண்டிக்கப்படுகிறார்கள்; கைது செய்யப்படுகிறார்கள்.
இதுதான் உண்மை. இப்படி பல்வேறு உறுதியான நடவடிக்கைகள் எடுத்து மக்களை காவல் துறையும், தமிழ்நாடு அரசும் பாதுகாத்து வருகிறது. ஆகவே, சில நேரங்களில் நடைபெறும் குற்றச் சம்பவங்களை வைத்து தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கே சீர்கெட்டு விட்டதாக மக்களை திசைதிருப்புவதற்காகவே வீண் புரளிகளை கிளப்பாமல், எதிர்கட்சித் தலைவராக இருந்தாலும், அவர் கூட்டணி வைக்கக் துடித்துக் கொண்டிருக்கக்கூடிய கட்சியாக இருந்தாலும் ஆக்கபூர்வமான அரசியல் செய்ய முன்வாருங்கள்.
தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் உங்களுடைய அம்மையார் ஆட்சியிலும் சரி, தற்போது எதிர்க்கட்சித் தலைவரின் முந்தைய ஆட்சியிலும் சரி, இப்போது எங்களது ஆட்சியிலும் நடைபெறும் குற்றச் சம்பவங்களின் தரவுகளை வைத்துத்தான் காவல் துறையின் செயல்பாட்டை அளவிட முடியும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
குறிப்பிட்ட சில சம்பவங்களை வைத்து, சட்டம்-ஒழுங்கு குறித்த தவறான பிம்பத்தை உருவாக்க வேண்டாமென இந்தத் தருணத்தில் ஊடகங்களையும் நான் அன்போடு கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். அரசின்மீது ஆக்கபூர்வமான குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். அரசியல் செய்வதற்காக தமிழ்நாடு காவல்துறையின் பெயரையும், அமைதியான மாநிலம் தமிழ்நாடு என்று இருக்கக்கூடிய பெயரையும் கெடுப்பதற்குக் துணை போகாதீர்கள் என்று கேட்டுக் கொண்டு அமைகிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
* அமைதி நிலவுகிறது முதல்வர் பேச்சு
சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,‘‘தமிழ்நாட்டில் பொது அமைதி நிலவுகிறது. அரசியல் செய்வதற்காக தமிழ்நாடு காவல்துறையின் பெயரையும், அமைதியான மாநிலம் தமிழ்நாடு என்று இருக்கக்கூடிய பெயரையும் கெடுப்பதற்கு துணை போகாதீர்கள்’’ என்றார்.
The post சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டதால் அதிமுக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்: அவையில் இருந்து கூண்டோடு வெளியேற்றம் appeared first on Dinakaran.