சட்டப்பேரவை கூட்ட தொடரில் டாஸ்மாக் குறித்து பேசுவதற்கு அனுமதி வழங்க மறுப்பது ஏன்: எடப்பாடி பேட்டி

1 week ago 2

சென்னை: சட்டப்பேரவை கூட்ட தொடரில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி:
கடந்த மார்ச் மாதம் டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும், டாஸ்மாக் நிறுவனத்துக்கு விநியோகம் செய்த மதுபான தயாரிப்பு தொழிற்சாலைகளிலும் 4 நாட்களுக்கு அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. சோதனையில் கிடைத்த ஆவணங்களின்படி ரூ.1,000 கோடி முறைகேடு நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

அமலாக்கத் துறை சோதனை நடத்தியதை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம், அரசு நிறுவனத்தில் சோதனை நடத்தியது தொடர்பாக ஒரு வழக்கையும், ஊழியர்களை துன்புறுத்தியதாக மற்றொரு வழக்கையும் நீதிமன்றத்தில் தொடுத்தது. மேலும், அமலாக்கத் துறை டாஸ்மாக் தொடர்பாக மேல் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

இந்நிலையில், வழக்கின் ஆரம்பக்கட்ட விசாரணையின் போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் தங்களை விடுவித்து கொண்டனர். அதை தொடர்ந்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வேறொரு அமர்வுக்கு இந்த வழக்கை மாற்றினார். ஆனால், இவ்வழக்கை எதிர்கொள்ள டாஸ்மாக் நிறுவனம், உச்ச நீதிமன்றத்தை நாடியிருக்கிறது. இந்த வழக்கை வேறு மாநில உயர் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் கோரியிருக்கிறது.

இதுகுறித்து, சட்டப்பேரவையில் பேசுவதற்கு அனுமதி கேட்டோம். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டு விட்டது. தமிழக அரசின் கீழ் இயங்கும் டாஸ்மாக் நிறுவனத்தின் வழக்கை ஏன் அம்மாநில உயர் நீதிமன்றமே எடுத்து விசாரிக்க கூடாது. அதை ஏன் வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும். சென்னையில் வழக்கு விசாரணை நடந்தால் மாநில அரசின் தில்லு முல்லுகள் உடனுக்குடன் மக்களுக்கு சென்றுவிடும் என்பதால் இவ்வாறு அரசாங்கம் செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post சட்டப்பேரவை கூட்ட தொடரில் டாஸ்மாக் குறித்து பேசுவதற்கு அனுமதி வழங்க மறுப்பது ஏன்: எடப்பாடி பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article